இந்தியாவின் முன்னணி பைக் வீராங்கனையான வீனு பாலிவால் சாலை விபத்தில் உயிரிழந்தார்

வீனு பாலிஇந்தியாவின் முன்னணி பைக் வீராங்கனையான வீனு பாலிவால் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் அரசு மருத்துவமனையில் அவருக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த 44 வயதான அவர் 180 கி.மீ. வேகம் செல்லும் ஹார்லி டேவிட்சன் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். காஷ்மீரில் தொடங்கிய பயணத்தை கன்னியாகுமரியில் முடிக்க அவர் திட்டமிட்டிருந்தார். அவருடன் திபேஷ் தன்வார் என்ற வீரரும் மற்றொரு பைக்கில் உடன் சென்றார்.

நேற்று முன்தினம் இருவரும் மத்திய பிரதேச மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வீனு பாலிவாலின் பைக் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த வீனு அருகே உள்ள கையாராஸ்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிக்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் வீனு பாலிவாலின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீனு பாலிவால் ‘லேடி ஆப் தி ஹார்லி’ என்ற புனை பெயரால் அழைக்கப்பட்டு வந் தார். காஷ்மீரில் தனது பயணத்தை தொடங்கிய வீனு நேற்று முன்தினம் அதிகாலை லக்னோவில் இருந்து போபாலை நோக்கி புறப்பட்டார். கல்லூரி காலத்தில் நண்பர்கள் மூலம் பைக் ஓட்ட கற்றுக்கொண்டுள்ளார் வீனு. அதி வேகமாக பைக் ஓட்டும் அதே வேளையில் பாதுகாப்பாக வண்டியை இயக்குவதிலும் கைதேர்ந்தவராக இருந்து வந்துள்ளார்.

சொந்த பைக் இல்லாததால் கல்லூரிப் பருவத்தில் தொடர்ச்சியாக பைக் ஓட்ட முடியாத நிலைக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து திருமணத்துக்கு பிறகு அவரது கணவர், பைக் ஓட்ட தடை விதித்தார். சில ஆண்டுகள் காத்திருந்த அவர், 2 குழந்தை களுக்கு தாயான நிலையில் விவகாரத்து பெற்றார். அதன் பின்னர் பைக் ஓட்டுவதில் கவனம் செலுத்த தொடங்கினார்.

பைக் பயணம் தொடர்பாக குறும்படம் தயாரிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஹெல்மட் மற்றும் பாதுகாப்பு உடையை வீனு அணிந்திருந்த போதிலும் விபத்தின் போது உடலில் அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அவர் இறக்க நேரிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இதனை வீனு பாலிவாலுடன் சென்ற திபேஷ் தன்வார் மறுத்தார். வீனுவுக்கு கை, கால்களில் மட்டுமே காயங்கள் இருந்தன. அரசு மருத்துவ மனையில் செவிலியர் அவருக்கு தவறான ஊசி செலுத்தியதால்தான் வீனு உயிரிழக்க நேர்ந்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top