அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு 3–வது வெற்றி 5–1 கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது

Azlan-Shah-Cup-HockeyIndian-team-3rd-win_SECVPF

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி 3–வது வெற்றியை ருசித்தது.

 

25–வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. வருகிற 16–ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா, ஜப்பான் ஆகிய 7 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதி பெறும்.

 

இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த தனது 4–வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. பெரும்பாலான நேரங்களில் (57 சதவீதம்) பந்து இந்திய வீரர்களின் கட்டிப்பாட்டில் தான் வலம் வந்தது.

4–வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் போட்டது. சுனில் கோலை நோக்கி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் மன்பிரீத்சிங் ‘ரிவர்ஸ் ஷாட்’ மூலம் கோலுக்குள் திருப்பினார். 7–வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் கேப்டன் முகமது இர்பான் கோலாக்கினார்.

அதன் பின்னர் இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியினர் திணறினார்கள். அதிரடி தாக்குதல் ஆட்டத்தின் பலனாக இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை பதிவு செய்து ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

 

இந்திய அணியில் சுனில் 10–வது மற்றும் 41–வது நிமிடத்திலும், தல்விந்தர்சிங் 50–வது நிமிடத்திலும் அசத்தலான பீல்டு கோல்களை அடித்தனர். 54–வது நிமித்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் 5–வது கோலை அடித்த ரூபிந்தர்பால்சிங், கடைசி 5 நிமிடம் இருக்கையில் கிடைத்த அரிய பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை எதிரணி கோல் கீப்பர் மேல் அடித்து வீணடித்து ஏமாற்றம் அளித்தார்.

முடிவில் இந்திய அணி 5–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 3–வது வெற்றியை தனதாக்கியது. 4–வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 3 வெற்றி (ஜப்பான், கனடா, பாகிஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) 9 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தை பிடித்துள்ளது. 4–வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும். 2003–ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி கண்ட மோசமான தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை சாய்த்து தொடர்ந்து 4–வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் (12 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. 5–வது ஆட்டத்தில் ஆடிய நியூசிலாந்து அணி 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3–வது இடத்தை வகிக்கிறது.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடப்பு சாம்பியன் நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும். இந்திய நேரப்படி பிற்பகல் 1.35 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top