அமெரிக்க பொருளாதாரம், மிகப்பெரிய மந்த நிலையை அடையும்; குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் பேட்டி

usஅமெரிக்க பொருளாதாரம், மிகப்பெரிய மந்த நிலையை அடையும் என்று குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியாளர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் (வயது 69), சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பாக அவர் சட்டவிரோதமான வகையில் கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தொடர்ந்து அங்கு 1973-ம் ஆண்டு முதல் கருச்சிதைவு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்காரணமாக அவர் கருச்சிதைவு செய்துகொள்கிற பெண்களுக்கு அல்ல, அவர்களுக்கு கருச்சிதைவு செய்கிற டாக்டர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில் அங்கு விஸ்கான்சின் மாகாணத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் நடக்கிறது. அங்கு டிரம்ப் கருத்துக்கணிப்புகளில் தனது போட்டியாளரான டெட் குரூசை விட பின்தங்கி உள்ளார். ஒரு வேளை அங்கு குரூஸ் வெற்றி பெற்றுவிட்டால், டிரம்ப் வேட்பாளர் ஆவதில் பெரும் நெருக்கடி உருவாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஸ்கான்சின் மாகாண தேர்தல் வெற்றி திருப்புமுனையாக அமைய வேண்டும் என்று கருதி டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய சூழலில் அவர் ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டத்தின் அளவு 5 சதவீதம் என்று அமெரிக்க தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் உண்மையான நிலவரம் அது அல்ல. இங்கு வேலை இல்லா திண்டாட்டத்தின் அளவு 20 சதவீதத்துக்கு மேல் உள்ளது.

ஆனால் இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவர தகவல், அரசியல்வாதிகளை குறிப்பாக ஜனாதிபதியை நல்லவராக காட்டுவதற்கானவை.

பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதற்கு இது மோசமான நேரம்.

ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம், இன்னொரு பக்கம், மிகை மதிப்பான பங்குச்சந்தை என இரண்டும் சேர்ந்து, அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய மந்த நிலையை அடையும்.

நாட்டின் கடன் அளவு 19 டிரில்லியன் டாலர்களாக (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி ஆகும்) உள்ளது.

இந்த கடனை (நான் ஜனாதிபதியானால்) 8 ஆண்டுகளில் தீர்த்து முடிப்பேன். இதற்காக எல்லா வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக மீண்டும் பேசுவேன். பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் விஷயத்திலும் மீண்டும் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top