நாட்டில் நெருக்கடி கால அபாயம் தற்போதும் தொடர்கிறது; மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

dddddd

நாட்டில் 1975-களில் நிலவியதைப் போன்ற நெருக்கடி கால அபாயம் தற்போதும் தொடர்கிறது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி தெரிவித்தார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை நடை பெற்ற, நானி பல்கிவாலா 12-வது நினைவு சொற்பொழிவில் “அரசியல் அமைப்பின் பார்வையில் குற்ற சட்ட இயல்” என்ற தலைப்பில் அவர் பேசியது:

ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் இலவச சட்ட உதவிகள் கிடைப்பதை வழக்கறிஞர்கள் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் மனிதத் தன்மையுடன் இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும். நான், 10 சதவீத பேரிடம் (கட்சிக் காரர்) மட்டுமே கட்டணம் வசூலிக் கிறேன். 90 சதவீத பேரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை.

அரசியல் அமைப்புச் சட்ட விதி- 21, தனி மனித உரிமைகள் மற்றும் மக்களின் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. இதை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதி- 14, கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் விதி- 19 ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் சட்டத்துக்கு உட்பட்ட மனித உரிமைகள் எவை என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். உயர்வான நீதி பரிபாலனம் மூலமே, நாட்டில் 1975-களில் நிலவிய நெருக்கடி நிலை காலம் எனப்படும் மக்களாட்சியின் இருண்ட காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இன்றைய இளம் வழக்கறிஞர்கள் அதைப் போன்ற உரிய நீதி பரிபாலனத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, எந்த ஒரு நெருக்கடியையும் சந்திக்கும் ஆற்றலுடன் இருக்க வேண்டும்.

நெருக்கடி நிலையின்போது, 9 உயர் நீதிமன்றங்கள் தனி மனித சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்தன. அப்போது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி மனித சுதந்திரத்தை அரசிடம் பலியிட்டது.

ஆனால், அந்த அமர்வில் இருந்த ஹன்ஸ்ராஜ் கண்ணா என்ற நீதிபதி மட்டும் தனது எதிர்ப்பை தெரிவித்து, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய தனி மனித உரிமை, கருத்துச் சுதந்திரத்தை எந்த ஒரு அரசாங்க உத்தரவும் கட்டுபடுத்துவது தவறு என்பதை ஆணித்தரமாக தெரிவித்தார். அந்த ஒற்றை நபரின் கூற்றே இப்போதும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் குரலாக ஒலிக்கிறது.

1975-களில் நிலவிய நெருக்கடி நிலை அபாயம் தற்போதும் காணப்படுவதால், மேலும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார் ஜெத்மலானி.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top