வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 3–வது முறையாக மீண்டும் விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்பினார்.

வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அமலாக்கப்பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியது.

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். கடந்த மாதம் 2–ந்தேதி இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற அவர் மீது தற்போது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளை பல்வேறு கோர்ட்டுகள் பிறப்பித்து உள்ள நிலையில், அவர் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகத்தில் கடந்த மாதம் 18–ந்தேதி நேரில் ஆஜராகுமாறு மல்லையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால் அன்று ஆஜராகாத அவர், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்வுகளில் பங்கேற்க இருப்பதால் தனக்கு மேலும் அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2–ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் எனக்கூறி மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பினார்.

இதற்கிடையே விஜய் மல்லையாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின் போது, தனது கடன் தொகையில் ரூ.4 ஆயிரம் கோடியை வருகிற செப்டம்பர் மாதம் செலுத்துவதாக மல்லையா தரப்பில் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து தன் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், தனது கடன் பாக்கியை செலுத்துவதற்கு தனது சட்டக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாலும் அமலாக்கத்துறை முன் ஆஜராக மே மாதம் வரை தனக்கு அவகாசம் வேண்டும் என்றும் விஜய் மல்லையா சார்பில் நேற்று முன்தினம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவரது இந்த கோரிக்கையை நிராகரித்த அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி, 9–ந்தேதி (சனிக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என நேற்று 3–வது முறையாக மீண்டும் விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்பினார்.

இந்த வழக்கில் அவருக்கு அனுப்பப்படும் கடைசி சம்மன் இதுவாக இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 3 சம்மன்கள் மட்டுமே அனுப்ப முடியும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வருகிற 9–ந்தேதியும் விஜய் மல்லையா நேரில் ஆஜராகவில்லை எனில், அவரது பாஸ்போர்ட்டை முடக்குவது மற்றும் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தல் போன்றவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறையால் எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top