அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள்!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, இறுதி சுற்றுக்குள்  மேற்கிந்திய தீவுகள் அணி நுழைந்துள்ளது.

west_0

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் பலப்பரீட்சை நடத்தின.

20  ஓவர்களின் முடிவில்  இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 192  ரன்கள் குவித்தது. கோலி அபாரமாக ஆடி 89 ரன்கள் குவித்தார், ரஹானே 40 ரன்களும், ரோஹித் 43 ரன்களும் குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் கோலிக்கு மட்டும் 4 விக்கெட் வாய்ப்புகளை கோட்டை விட்டனர்.

இந்த தொடரில் இந்தியாவின் துவக்க பார்ட்னர்ஷிப் முதல் முறையாக 50 ரன்னை கடந்தது. துவக்க வீரர் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 43 ரன்களை குவித்தார். நட்சத்திர வீரர் கோலியை 1 ரன்னில் இருந்தபோது இரண்டுமுறை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தவறவிட்டனர்.

உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணியை முடிவு செய்யும் அரையிறுதியில், டாஸ் வென்ற மே.இ தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் யுவராஜ் சிங்குக்கு பதிலாக மனிஷ் பாண்டேவும், தவானுக்கு பதில் ரஹானேவும் சேர்க்கப்பட்டனர்.

கோலியும், ரஹானேவும் பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டுவதை காட்டிலும் ஓரிரு ரன்களாக துரிதமாக எடுப்பதில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டனர். ரஹானே தனது பங்குக்கு 40 ரன்கள் (35 பந்து, 2 பவுண்டரி) எடுத்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.

அடுத்து கேப்டன் டோனி வந்தார். இறுதி கட்டத்தில் இந்தியாவின் ரன்வேகம் சூடுபிடித்தது. 33 பந்துகளில் 16-வது அரைசதத்தை கடந்த கோலி, தொடர்ந்து வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை வறுத்தெடுத்து, ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. கடைசி ஓவரிலும் கோலிக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை லென்டில் சிமோன்ஸ் நழுவ விட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கோலி 89 ரன்களுடனும் (47 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 15 ரன்களுடனும் (9 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் நமது வீரர்கள் 59 ரன்கள் சேர்த்தனர்.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், ‘சிக்சர் புயல்’ கிறிஸ் கெய்ல் 5 ரன்னிலும், சாமுவேல்ஸ் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கெய்ல் வெளியேறியதும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அதிகமானது. ஆனால் அந்த பூரிப்பு அடுத்த ஒரு மணி நேரத்தில் கரைந்து போனது.

3-வது விக்கெட்டுக்கு ஜான்சன் சார்லசும், லென்டில் சிமோன்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் டோனி ரொம்பவே சிரமப்பட்டார். கடைசியில் பகுதி நேர பவுலர் கோலி இந்த ஜோடியை பிரித்தார். அணியின் ஸ்கோர் 116 ரன்களாக (13.1 ஓவர்) உயர்ந்த போது சார்லஸ் 52 ரன்களில் (36 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அடுத்து ஆந்த்ரே ரஸ்செல், சிமோன்சுடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை கலங்கடித்தனர். நெஹராவை தவிர மற்ற பவுலர்களால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் ஆவேசத்தை துளியும் கட்டுப்படுத்த முடியவில்லை. கைவசம் விக்கெட்டுகள் இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், கவலையின்றி சரவெடியாய் வெடித்து தள்ளினர். இந்தியாவின் பீல்டிங்கும் மோசமாக இருந்ததால் படிப்படியாக ஆட்டம் கையை விட்டு போனது.

கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய ஜடேஜா 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர்கள் இல்லாததால், கேப்டன் டோனி வித்தியாசமாக விராட் கோலியை இறுதி ஓவருக்கு பயன்படுத்தினார். ஆனால் அவரது ஆச்சரியமான முடிவுக்கு பலன் தான் கிட்டவில்லை. ஆந்த்ரே ரஸ்செல் பவுண்டரி, சிக்சருடன் இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சிமோன்ஸ் 82 ரன்களுடனும் (51 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ரஸ்செல் 43 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர். சிமோன்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதை தொடர்ந்து, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top