வளர்ச்சியின் நாயகன் என நடித்து வருகிறார் மோடி: ஜி.ராமகிருஷ்ணன்

G Ramakrishnanமோடியின் ஆட்சி காலத்தில் குஜராத் மக்கள் வளர்ச்சி அடையவில்லை மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் நரேந்திர மோடியோ நாட்டு மக்களின் வளர்ச்சி நாயகன் போல நடித்து வருகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்யாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘‘அ.தி.மு.க.வோடு உறவை முறித்துக்கொண்ட நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான் நமது பலம். ஒருவேளை தி.மு.க.வோடு இணைந்திருந்தால் 2ஜி அலைக்கற்றை ஊழலைப் பற்றி பேசமுடியாமல் போயிருக்கும்.

தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க. காங்கிரசுக்கு மாற்று பி.ஜே.பி. இவர்கள் அனைவருக்கும் மாற்று நாங்கள்தான். அதை யாராலும் மாற்ற முடியாது. சில்லரை வர்த்தகத்தை 2002ல் வாஜ்பாய் அரசு முன்மொழிந்தது. 2012ல் மன்மோகன் அதை அமலாக்கினார். இவர்கள் அனைவரும் இணைந்து நமது நாட்டின் பொருளாதாரத்தை சீற்குலைத்துவிட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க வடக்கே வளர்ச்சியின் நாயகன் என்று நடித்து வருகிறார் மோடி. 2000ஆம் ஆண்டு குஜராத் 4வது இடத்தில் இருந்தது. மோடி ஆட்சியில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் முறைசாரா தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.469 சம்பளம். ஆனால் குஜராத்திலோ ரூ.376 தான். விவசாயிகளுக்கு மற்ற மாநிலத்தில் கூலி 230, குஜராத்திலோ 166. இதுதான் குஜராத்தின் வளர்ச்சியா?

குஜராத்தின் வளர்ச்சி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிதானே தவிர குஜராத் குடிமக்களின் வளர்ச்சியல்ல. மோடியும் வளர்ச்சியின் நாயகனும் அல்ல. ஆகவே, காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சி இனி இந்தியாவில் அமைந்து விடக்கூடாது.

பா.ஜ.க.வையும், மோடியையும் விமர்சிக்காமல் அவர்களுக்கு மறைமுக ஆதரவு தரும் அ.தி.மு.க.வையும் இந்தத் தேர்தலில் தோற்கடிப்பது நமது கடமை. எனவே, குமரி தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினுக்கு உங்கள் வாக்குகளை அளித்திடுங்கள்’’ இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top