யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை பிரின்ட் அவுட்டில் பார்க்கும் வசதி மத்திய சென்னை தொகுதியில் அறிமுகம்

VOTE31ஓட்டு எந்திரத்தில் ஓட்டுப்போட்டவுடன் யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை உறுதி செய்யும் வசதி, இந்த தேர்தலில் முதன் முறையாக மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஓட்டு எந்திரத்தில் பதிவு செய்த வாக்கு, யாருக்கு சென்றது என்பதை உறுதி செய்வதற்காக பரீட்சார்த்த முறையில் வி.வி.பி.ஏ.டி. என்ற முறையை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையை நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அறிமுகம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் மத்திய சென்னை தொகுதியும் ஒன்று.

இந்த தொகுதியில் உள்ள ஆயிரத்து 153 வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டு இருக்கும். வாக்காளர் ஒருவர் ஓட்டு எந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்தி வாக்கு செலுத்தியதும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ, அந்த வேட்பாளரின் சின்னம் வி.வி.பி.ஏ.டி. வசதி கொண்ட எந்திரத்தில் அச்சடிக்கப்படும்.

அந்த அச்சிடப்பட்ட தாள், அதிலுள்ள கண்ணாடி வழியாக வாக்காளருக்கு மட்டும் காட்டப்படும். பின்னர் அந்த அச்சிடப்பட்ட தாள், அந்த எந்திரத்திலேயே இருந்துவிடும்.

இதன் மூலம் தான் அளித்த வாக்கு சரியான நபருக்குத்தான் சென்றுள்ளது என்பதை அந்த வாக்காளர் உறுதி செய்துகொள்ள முடியும்.

இந்த வி.வி.பி.ஏ.டி. வசதி குறித்த பயிற்சியை, மூத்த அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் டெல்லியில் வழங்க உள்ளது. இவர்கள் பயிற்சி பெற்று, மத்திய சென்னையின் மற்ற தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top