மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் உலக தரத்தில் ‘உயிரியல் பூங்கா’ ஒன்று அமைக்கப்பட உள்ளது.

8219மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை தண்ணீருக்கு அடியில் நேரடியாக சுற்றுலா பயணிகள் காண்பதற்காக வெளிநாடுகளில் இருப்பது போன்று உலக தரத்தில் ரூ.257.59 கோடியில் மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் ‘உயிரியல் பூங்கா’ அமைக்கப்பட உள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், துபாய், அமெரிக்கா (புளோரிடா மாகாணம்) உள்ளிட்ட பல்வேறு மேலைநாடுகளில் கடலுக்கு அடியில் தனியார் ஓட்டல்கள் கண்ணாடி அறைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை சுரங்கப்பாதை வழியாக அழைத்து சென்று தங்க வைக்கின்றனர்.

அத்துடன் கடல் வாழ் உயிரினங்களையும் சுற்றி காண்பித்து விளக்கம் அளிக்கின்றனர். சுற்றுலா பயணிகளிடம் இருந்து இதற்கு ஒரு பெரும் தொகையையும் வசூலிக்கின்றனர்.

அதேபோன்று நாட்டிலேயே முதன் முறையாக மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் உலக தரத்தில் ‘உயிரியல் பூங்கா’ ஒன்று அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடலுக்கு அடியில் உள்ள அற்புத உலகத்தையும், அங்கு வசிக்கும் உயிரினங்களையும் பார்த்து பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் உலக தரத்தில் ‘உயிரியல் பூங்கா’ அமைக்கப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் இருந்து இந்த பூங்காவுக்கு செல்ல சுரங்கப்பாதை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் கடற்கரையில் 13.07 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.257.59 கோடி மதிப்பில் பணிகள் நடக்க உள்ளது. வடிவமைப்பு, நிதி உருவாக்கம் செயல்பாடு மற்றும் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு, தேவையான நிதி பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (பி.பி.பி) முறையில் பெறப்பட உள்ளது.

இதன் மூலம் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை சுற்றுலா பயணிகள் நேரடியாக காணமுடியும். அதேபோல் உலக அளவில் ‘கடல் உயிரியல்’ துறையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இது பயனுள்ள வகையில் இருக்கும். கடலுக்கு அடியில் அமைக்கப்படும் கண்ணாடி அறை சுரங்கம் மூலம் இணைக்கப்படுகிறது. இதில் இருந்து பல்வேறு கோணங்களில் ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை காண முடியும். அத்துடன் பவளப்பாறை திட்டுக்களையும் பார்த்து பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் மற்றும் அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட கடந்த 2013-ம் ஆண்டு 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 45 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதுதவிர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாணவர்கள் உள்பட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெரும் வகையில் இந்த ‘உயிரியல் பூங்கா’ அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ‘உயிரியல் பூங்கா’ இருக்கும் பகுதியில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருந்து கடல் மீன்கள் கொண்டு வந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் கடலுக்கு அடியில் உயிரினங்களை நேரடியாக காண்பதற்காக 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

அத்துடன் 6.54 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய ஓய்வு எடுக்கும் பகுதி, 50 சிறிய தொட்டிகள், 60 சுவர் எழுப்பப்பட்ட தொட்டிகள், குள்ளமானவர்கள் முதல் உயரமானவர்கள் வரை செல்லும் வகையில் 9 மீட்டர் சுற்றளவு கொண்ட 5 உருளை தொட்டிகள், 300 கடல் வாழ் உயிரினங்களை 20 ஆயிரம் பேர் காணும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் 300 இருக்கைகளுடன், சிறப்பு சப்த வசதிகளுடன் கூடிய மல்டி மீடியா தியேட்டர், 2 நினைவு பொருட்கள் வாங்கும் கடைகள் அமைக்கப்படுகிறது. அத்துடன் கூடுதல் வசதியாக சுறாக்களுடன் நீச்சல் அடிக்கும் வசதி, ஆக்சிஜன் குழாயை சுமந்தபடி கடலுக்கு அடியில் சென்று ஆய்வு செய்யும் ‘ஸ்கூப டைவிங்’ பயிற்சி, சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக 6 சொகுசு அறைகள், 1000 பேர் அமரும் சமுதாயக் கூடம், 60 பேர் அமரும் வகையில் கடலுக்கு அடியில் ஓட்டல் அமைக்கப்படுகிறது.

50 பென்குயின்கள் அடங்கிய பூங்கா, 2 ஆயிரம் இருக்கைகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம், இசை நீர்வீழ்ச்சி, ஆமை பூங்கா, கார், ஸ்கூட்டர், லேசர் ஷோ, விளையாட்டு மீன்பிடிப்பு தொட்டிகள், மீன் குஞ்சுகளுக்கு என்று தனியான இடவசதி போன்றவை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் தற்போது டெண்டர் நிலையிலேயே உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top