மணல் அள்ள உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

highcourt_2597637hசட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி டி.பிரபாகரன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் வழியாக கவுசீக ஆறு பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த கவுசீக ஆற்றை நம்பித்தான் விவசாய நிலங்கள் உள்ளன. தெக்கலூர் ஆற்றங்கரையில் தடையை மீறி மணல் அள்ள சில அரசு அதிகாரிகள் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். கிராம மக்களின் எதிர்ப்பையும் அவர்கள பொருட்படுத்தவில்லை.

இதையடுத்து மணல் அள்ள தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரையில் மணல் அள்ள யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாது’ என்று கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

வழக்கு விசாரணையின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடராஜன், மணல் அள்ளவில்லை, ஆற்றை சுத்தம் செய்கிறோம் என்று பதில் மனுவில் கூறியிருந்தார். என் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மணல் அள்ளக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுவதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மே மாதம் ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறையை பயன்படுத்தி மீண்டும் மணல் அள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசு அனுப்பியும், மணல் அள்ளுவதை நிறுத்தவில்லை. மே 26-ந் தேதி அதிகாரிகளின் தூண்டுதலின்பேரில் என் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தினார்கள். அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று என்னை போலீஸ்காரர்கள் கொடூரமாக தாக்கினார்கள். வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டினார்கள். என் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவை மீறி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கிய திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், பவானிசாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடராஜன், அவினாசி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு குறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் நேற்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர், ரகசிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு தனி நபர்களுடன், அரசு உயர் அதிகாரிகள் கைகோர்த்து செயல்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. இந்த அதிகாரிகள் மணல் அள்ள பலருக்கு அனுமதி வழங்கியுள்ளனர். விண்ணப்பம் செய்யாதவர்களுக்கும், இறந்துபோன நபர்களின் பெயர்களுக்கும் மணல் அள்ளும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தமிழக அரசு 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கவேண்டும்.

தவறு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணையையும் தமிழக அரசு மேற்கொள்ளலாம். மேலும், மனுதாரர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கொடுமை செய்ததாக கூறப்பட்ட புகார் குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக ஜூன் 27-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top