பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு குடும்ப அட்டை -ரேஷன்கார்டு முகவரிக்கான ஆவணமாக ஏற்கப்படாது

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

hg

இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று ஆவணமாக குடும்ப அட்டையும் (ரேஷன் கார்டு) இடம் பெற்று இருந்தது. தற்போது முகவரிக்கான சான்றாவணத்தில் இருந்து குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோக துறை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந் தேதி வெளியிட்ட அரசாணையில் குடும்ப அட்டை வினியோகம் செய்யப்படுவது உணவு பொருட்கள் வாங்குவதற்காக தான். அதனை அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆவணமாக பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த ஆணையை இந்திய வெளி விவகார துறை ஏற்று உள்ளது. இதன் அடிப்படையில் குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top