தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

c2f4185d-b4e3-4a38-a9f6-7c8eca477888_S_secvpfசென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:–

திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ளேன். எங்களது இயக்கம் அரசியல் கட்சி கிடையாது. தந்தை பெரியாரின் கொள்கையை பின்பற்றி செயல்படும் இயக்கமாகும்.

சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கைகளுக்கும், இனவேறுபாடுகளுக்கும் எதிராக செயல்பட்டவர்.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது.

கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திரவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5–ந் தேதி உத்தரவிட்டுள்ளனர். ஆனால், எங்களது இயக்கம் அரசியல் கட்சி கிடையாது.

தந்தை பெரியார் அரசியல் தலைவர் இல்லை. இதனால், தேர்தல் நேரத்தில் பெரியாரின் சிலையை மறைக்க தேவையில்லை என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகளிடம் எங்கள் அமைப்பு நிர்வாகிகள் கூறியும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலையை மறைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.ராஜகோபாலன், ‘தந்தை பெரியார் சிலையை மறைக்க உத்தரவு எதுவும் போடவில்லை. மாநிலத்தில் எங்காவது மறைக்கப்பட்டிருந்தால், இனி பெரியார் சிலையை மறைக்க மாட்டோம்’ என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளை தேர்தல் அதிகாரிகள் மறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top