அலிகர் முஸ்லிம் பல்கலையில் மத்திய அரசு தலையீடு எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக கூறி, காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், சிறுபான்மை நிறுவனமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு உள்ள தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.

Aligarh_Muslim_University_650அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ‘‘இதுகுறித்து விவாதிக்க விரும்பினால் நோட்டீஸ் கொடுங்கள். அவைத் தலைவர் முடிவெடுப்பார்’’ என்றார். எனினும், சிறுபான்மை நிறுவனங்களை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. மத்திய அரசு தலையிடுகிறது என்று கூறி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டனர்.

சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஜாவீத் அலி கான் பேசுகையில், ‘‘அலிகர் பல்கலைக்கழகம் 5 வளாகங்களை தொடங்க முடிவெடுத்தது. அவற்றில் 3 வளாகங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஆனால், அந்த வளாகங்கள் சட்டவிரோதமானவை, அவற்றை மூட வேண்டும், இல்லாவிட்டால் அலிகர் பல்கலைக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்’’ என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளிக்கையில், ‘‘அலிகர் முஸ்லிம் பல்கலை உட்பட சிறுபான்மை நிறுவனங்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அலிகர் பல்கலை.யை பொறுத்த வரை இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை எல்லோரும் ஏற்க வேண்டும்’’ என்றார்.

இந்த பதிலில் திருப்தி அடையாத சரத்யாதவ் (ஐஜத), ஆனந்த் சர்மா, திக்விஜய் சிங் (காங்.), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), ஆகியோர் ஜாவீத் அலி கானுக்கு ஆதரவாக பேசினர். இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து கோஷமிட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால், அவையை பகல் 12 மணி வரை குரியன் ஒத்திவைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top