பிளாஸ்டிக், பாலிதீன் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீது என்ன நடவடிக்கை? ஐகோர்ட்டு கேள்வி

தேர்தலின்போது பிளாஸ்டிக்கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கொடிகள் மற்றும் விளம்பர பலகைகளை பயன்படுத்துவார்கள். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கழிவுநீர் மற்றும் மழைநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது. மெல்லிய பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே தேர்தலின்போது பிளாஸ்டிக் கொடிகள், விளம்பர பலகைகளை பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்’என்று கூறியிருந்தார்.

இந் மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், ‘பிளாஸ்டிக் கொடி, பேனர்களை பயன்படுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம். கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி தேர்தலின்போது பிளாஸ்டிக், பாலிதீன் கொடிகள், பேனர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தியபோது, அவற்றை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டோம். இதுபோன்ற அறிவுறுத்தலை வருகிற தேர்தலின்போதும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்’ என்று கூறினார்.

மேலும், இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய விரும்புவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வக்கீல் கூறினார். எனவே, பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களால் கொடிகள், பேனர்களை பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top