அமெரிக்க தூதர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்பு – இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா???

98

தூதர் என்பது இன்றைய நேற்றைய காலப் பழக்கம் அல்ல ஒரு நாட்டிற்காக அதன் கொள்கையை எடுத்துச் சொல்ல மற்றொரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் ஒரு முகவர் தான் தூதர். இந்த தூதரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான வரையறைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் இருந்து இன்று வரை ஏகப்பட்ட வரைமுறைகள் உள்ளது. அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வரையறைகள் தான் அவைகள் இதே போல் அவர்கள் எதைச் செய்யக் கூடாது என்பதற்கான வரைமுறைகளும் உண்டு. தூதரங்கள் குறித்து ஐ.நாவின் வியன்னா ஆவணம் 1961ம் ஆண்டு மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. தூதரகத்தின் செயல்பாடுகள் என்பது இரண்டு நாட்டுக்கும் இடையிலான உறவை வளர்த்தெடுப்பதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது ஐ.நாவின் வியன்னா அறிக்கை.

இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கொள்கைகளை செயல்படுத்துபவர்களாகவே தூதரகத்தின் தலைமை செயளாலர் செயல்படுவார்கள்.  இத்தகைய நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு நாட்டின் தூதரகம் தனது நாட்டின் தேவைகளை இந்தியாவில் நிலைநிறுத்த வேலை செய்யும். அப்படி அவர்கள் செயல்படும் பொழுது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தான் அவர்களுக்கான தொடர்பு மையம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் இந்தியாவில் பிறநாட்டினர் முதலீடு குறித்தான முடிவுகளையும் எடுப்பது மத்திய அரசு தான், மாநில அரசு இத்தகைய விசயங்களில் எந்தவிதமான முடிவையும் எடுக்கவியலாது.

தற்பொழுது கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரி தமிழக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இதே போன்ற சந்திப்புகள் முன்னரும் நடந்துள்ளது அதில் மிக முக்கியமானது 2009ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடனான அமெரிக்க தூதரக அதிகாரிகள் சந்தித்ததும் அதன் தொடர்பான செய்திகளும் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவின் தூதரக அதிகாரி மாறனை சந்தித்த பொழுது மாறன் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை அதற்கு ஒரு வருடம் முன்பே பதவியை விட்டு விலகி விட்டார். எந்த வித அதிகாரத்திலும் இல்லாத வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்த தயாநிதி மாறனை அன்றைய காலகட்டத்தில் சந்தித்தது என்பது ஈழம் தொடர்பாக கருணாநிதி அறிவித்த அனைத்து தமிழக எம்பிகளும் ராஜினாமா நாடகத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. விக்கிலீக்ஸில் இது தொடர்பான அமெரிக்க தூதரக கேபிள் செய்திகள் வெளியானது. தி இந்து பத்திரிக்கையும் இந்த செய்தியை வெளியிட்டது 2011ம் ஆண்டு.

 

அமெரிக்க தூதரகம் இந்தியாவில் செய்யவேண்டியது தனது நாட்டின் நலனை இந்திய மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே. இந்தியாவைப் பொறுத்தவரை அதன் அரசியல் சாசனச் சட்டத்தின் படி மாநில அரசுகள் எந்தவிதமான நேரடியான பேச்சுவார்த்தையையும் அந்நிய நாடுகளுடன் செய்யமுடியாது. இந்த நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரிடையாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் தான் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளான கருணாநிதி முதல் விஜயகாந்த் முதற்கொண்டு சிலரை சந்திப்பது என்பது எந்த காரணத்தினால் என்பது ஆராயப்பட வேண்டும். இப்படி இந்தியாவின் ஒரு பகுதியை சார்ந்த கட்சிகளை சந்திப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்குமா இல்லையா என்பதைப் பற்றி பேச சோ கால்ட் தேசபக்த கட்சிகள் குருடாக இருக்கின்றன.

மிகச் சிறிய நாடான ஈக்வடார் தனது பாதுகாப்பு முதற்கொண்டு பல துறைகளில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது ஆனால் என்று அமெரிக்காவின் தூதரக அதிகாரிகளும் அமெரிக்க தூதரகம் மூலமாக செயல்படும் USAID என்ற அமைப்பும் தனது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறது என்பதை உணர்ந்தார்களோ உடனடியாக அமெரிக்க இராணுவ அதிகாரிகளையும் USAID என்ற நிறுவனத்தையும் வெளியேற்றியது.

2011ம் ஆண்டு ஜெர்மனி தன் நாட்டில் இருந்த ஒரு அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது. தன் நாட்டு ரகசியங்கள் திருடு போவதை குறித்து ஒருவரை சந்தேகத்தின் பெயரில் விசாரித்த பொழுது ஜெர்மனியில் இருந்த அமெரிக்க அதிகாரியின் பெயரும் வந்தது அதன் கீழாக ஜெர்மன் அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

2014ம் ஆண்டு வெனின்சூலா அரசிற்கு எதிராக போராடியவர்களுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருக்கிறார்கள், இது வெனிசூலா நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவது என்று சொல்லி 3 அமெரிக்க அதிகாரிகளை 48 மணி நேரத்தில் வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது.

ஏன் 2014ம் ஆண்டு ஜுன் மாதம் பஹ்ரைனுக்கு அரசுப் பூர்வமாக பார்வையிட அமெரிக்காவின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் செயலாளர் டாம் மொலினோஸ்விகி பஹ்ரைன் அரசிற்கு எதிரான சிட்டே குழுவின் தலைவரை சந்தித்தார் என்பதற்காக, “தங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் அமெரிக்க அதிகாரி தலையிட்டார்” என்று சொல்லி பஹ்ரைனிலிருந்து அவரை வெளியேற்றியது.

அமெரிக்கா டிப்ளமேட்டிக் அலுவலர்கள் தனது தேவைக்காக நடந்து கொள்ள வேண்டிய முறைகளை மீறி நடந்துகொள்வார்கள். அதே நிலை தான் தற்பொழுது தமிழக அரசியல்வாதிகளை சந்திக்கும் விசயத்திலும் நடந்து கொண்டுள்ளது கேட்டால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பார்கள். மரியாதை கொடுப்பது என்பது ஒருவரை ஒருவர் எதிர்பாராதவிதமாக சந்திக்கும் பொழுது அவர் தனது எதிரியாக கூட இருந்தால் கூட மரியாதை கொடுத்து சந்திப்பதை சொல்லலாம். ஆனால் முன்கூட்டியே அனுமதி வாங்கி நேரில் அலுவலகத்திற்கோ வீட்டிற்கோ வந்து சந்திப்பதை திட்டமிட்ட சந்திப்பு என்று தான் கூற இயலும் ஆனால் இவர்கள் அதை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிறார்கள். பொதுதளத்தில் அரசியல்வாதிகள் தாங்கள் சந்திக்கும் நபர்களுடன் என்ன பேசினார்கள் என்பதை வெகுமக்கள் அரசியலில் இருப்பவர்கள் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை. அதை விடுத்து ராஜாங்க ரீதியாக, மரியாதை நிமித்தமாக என்று கூறுவது எல்லாம் மக்களிடம் தாங்கள் செய்யும் திருகுதாளங்களை மறைக்கும் விசயங்கள் தான்.

ஆயுதன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top