நேபாளத்தில் விமான விபத்து: 23 பேர் பலி!

நேபாளத்தில் சிறிய வகை பயணிகள் விமானம் மலைப்பகுதியில் புதன்கிழமை விழுந்து நொறுங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள், 2 வெளிநாட்டவர் அடங்குவர்.

25
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான “டுவின்-ஓட்டர்’ ரக விமானம், மலைவாசஸ்தலமான பொகாரா நகரிலிருந்து, ஜாம்ஸம் நகருக்கு புதன்கிழமை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மியாக்டி மாவட்ட மலைப் பகுதியில் அந்த விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டறியப்பட்டன. விமானச் சிதறல்களைச் சுற்றிலும் பயணிகளின் உடல்கள் காணப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுற்றுலா மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனந்த போக்கரேல் கூறுகையில், சோலிகோப்டே வனப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி
யுள்ளதாகத் தெரிவித்தார்.
விழுந்து நொறுங்கிய விமானத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 18 நேபாள நாட்டவர்கள், இரண்டு வெளிநாட்டவர், 3 விமானப் பணியாளர்கள் இருந்ததாகவும், இந்த விபத்தில் அந்த 23 பேரும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டவர்களில் ஒருவர் சீனாவையும், மற்றொருவர் குவைத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
விழுந்து நொறுங்கியதில் அந்த விமானம் தீப்பற்றி எரிந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்னபூர்ணா மலைப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக அந்தப் பகுதியில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 3 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ராணுவம், ஆயுதக் காவல் படை, போலீஸார் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top