டெல்லியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் மீது பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் வக்கீல்கள் மோதலால் பரபரப்பு

பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9–ந் தேதி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல்குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு எதிராக மாணவர்களில் ஒரு பகுதியினர் கோஷமிட்டனர். இதனால் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கன்னையா குமாரை தேச துரோக வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 15–ந் தேதி கன்னையா குமார் டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டபோது, கோர்ட்டுக்குள் குவிந்திருந்த நேரு பல்கலைக்கழக மாணவர்கள், செய்தியாளர்களை ஆளும் கட்சியை சேர்ந்த வக்கீல்கள் தாக்கினர். இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் மாணவர்கள், செய்தியாளர்கள் என 6 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் ஜெயபிரகாஷ், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், ‘கன்னையா குமார், மாணவர்கள், செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், தாக்குதலில் ஈடுபட்ட பிஜேபி  கட்சியை சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படியும்’ கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘6 வக்கீல்கள், 5 செய்தியாளர்கள், 2 மாணவர்கள், பல்கலைக்கழக துறை தரப்பில் 2 பேர், விசாரணை அதிகாரி ஒருவர் ஆகியோர் மட்டுமே மாணவர் கன்னையா குமார் தொடர்பான வழக்கு விசாரணையின்போது பாட்டியாலா கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்’’ என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் கன்னையா குமார் மீதான வழக்கு விசாரணை தொடங்கும் முன்பாக விக்ரம் சவுகான் என்ற ஆளும் கட்சியை வக்கீல் வந்தே மாதரம் என்று கோஷமிட்டுக் கொண்டே தேசிய கொடியை அசைத்தவாறே பாட்டியாலா கோர்ட்டுக்குள் வந்தார். அவருடன் பல வக்கீல்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டே கோர்ட்டுக்குள் நுழைந்தனர்.

அப்போது கன்னையா குமாருக்கு ஆதரவாக சில வக்கீல்கள் முழக்கங்களை எழுப்பினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர். அப்போது இரு தரப்பினர் இடையேயும் கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதற்கிடையே, போலீஸ் காவல் முடிந்து கன்னையா குமாரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஒரு வாகனத்தில் பிற்பகல் 2.45 மணி அளவில் அழைத்து வந்தனர். அவர்கள் கோர்ட்டு அறையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது விக்ரம் சவுகான் தலைமையிலான வக்கீல்கள் போலீஸ் பாதுகாப்பையும் மீறி கன்னையா குமாரை பலமாக தாக்கினர். அவரை அழைத்து வந்த போலீசாருக்கும் அடி–உதை விழுந்தது. இதனால் கன்னையா குமார் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு வந்த செய்தியாளர்கள், மாணவர்களை வக்கீல்கள் கடுமையாக தாக்கினர். இதில் செய்தியாளர்கள் சிலரும், ஒரு சில மாணவர்களும் காயம் அடைந்தனர். செய்தியாளர்கள் படம் பிடித்த செல்போன்களை வலுக்கட்டாயமாக பறித்த சவுகான் ஆதரவு வக்கீல்கள் அவற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்த வீடியோ காட்சிகளையும் நீக்கினர்.

கடந்த 15–ந் தேதி தாக்குதலில் ஈடுபட்ட அதே வக்கீல்கள்தான் நேற்றும் வன்முறையில் இறங்கியது தெரியவந்து உள்ளது.

பாட்டியாலா கோர்ட்டில் நேற்று மதியம் நடந்த புதிய வன்முறை சம்பவம் மற்றும் மாணவர் தலைவர் கன்னையா குமார் தாக்கப்பட்டது பற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு மூத்த வக்கீல் இந்திரா ஜெயசிங் உடனடியாக தகவல் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘சட்டம் ஒழுங்கு நிலைமை கவலை அளிப்பதாக’ தெரிவித்தது.

பின்னர் பாட்டியாலா கோர்ட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை விசாரணையை நிறுத்தி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனால் சிறிது நேரம் விசாரணை நிறுத்தப்பட்டது.

மேலும் நீதிபதிகள் அமர்வு, மூத்த வக்கீல் கபில் சிபல், ராஜீவ் தவன், துஷ்யந்த் தவே, ஏ.டி.என். சின்கா, அஜித் சின்கா, ஹரிண் ராவல் கொண்ட 6 பேர் குழு ஒன்றை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாட்டியாலா கோர்ட்டுக்கு அனுப்பி அங்குள்ள நிலவரத்தை நேரில் கண்டு கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து பாட்டியாலா கோர்ட்டு வாயிற் கதவுகள் டெல்லி போலீசாரால் பூட்டப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த வக்கீல்கள் மற்றும் சிலரை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அப்போது அவர்கள் மீது வெளியில் இருந்த வக்கீல்கள் சரமாரியாக கற்களை வீசினர்.

பிற்பகல் 3 மணி அளவில் பாட்டியாலா கோர்ட்டில் விசாரணை நடந்த அறையில் கன்னையா குமாரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரிக்கும் முன்பாக மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு லவ்லின், சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வக்கீல்கள், செய்தியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், விசாரணை அதிகாரி ஆகியோரை மட்டுமே கோர்ட்டு அறைக்குள் அனுமதித்தார்.

பின்னர், வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மார்ச் 2–ந் தேதி வரை கன்னையா குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அவரை சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

நேரு பல்கலைக்கழகத்தில் போலீஸ் எடுத்த நடவடிக்கை தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய அரசு, டெல்லி மாநில அரசு, டெல்லி போலீஸ் ஆகியவற்றுக்கு நேற்று நோட்டீசு அனுப்பியது.

இதனிடையே, பாட்டியாலா கோர்ட்டில் நேற்று நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸ் அறிக்கை அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top