அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஆதரவாக 10ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்

athikadavu__largeஅத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் பத்தாவது நாளை எட்டியுள்ளது.

கடந்த 8 ‌ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்14 பேருக்கு ஆதரவாக, இன்று 68 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்படும் என தமி‌ழக அரசு அறிவித்தும் இந்தப் போராட்டம் தொடர்கிறது. திட்டம் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். உறுதியான அறிவிப்பு வெளியிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: போராட்டப் பாதை

அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தினை உடனடியாக நிறைவேற்றக்கோரி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 14 பேர் கடந்த 8 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை நிறைவேற்றக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கு தீர்வு காணும்படி, அவினாசி பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள், கடந்த 12ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, அரசு வழங்கிய விலையில்லாப் பொருட்களை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் திருப்பி அளிக்கச் சென்றனர். இந்த நிலையில் அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிலைநிலை அறிக்கையின்போது தமிழக அரசு அறிவித்தது. எனினும் இந்த திட்டத்திற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிடக் கோரி, உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top