தெற்காசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது

632d39ad-2e6e-4f9b-a3d3-abec028350bf_S_secvpf12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து வருகிறது.

9-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் நடந்த 6 பந்தயங்களிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஓம்கார்சிங் 198.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் அணிகள் பிரிவில் ஓம்கார்சிங், குர்பிரீத்சிங், ஜிதேந்திர விபுதே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,735 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ரா சர்னோபாத், அனிசா சையத், அன்னுராஜ் சிங் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை வென்றனர். இதன் அணிகள் பிரிவிலும் மேற்கண்ட 3 பேர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மொட்ஜில், எலிசபெத் சுசன் கோஷி, லஜ்ஜா குஸ்வாமி ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களுக்கு முத்தமிட்டனர். இதன் அணிகள் பிரிவிலும் இந்த 3 பேர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 18 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரையத்லான் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் திலிப்குமார் (2 மணி 02 நிமிடம் 53 வினாடி) தங்கப்பதக்கமும், குருதத் (2 மணி 05 நிமிடம் 31 வினாடி) வெள்ளிப்பதக்கமும், இதன் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பல்லவி ரேதிவாலா (1 மணி 11 நிமிடம் 57 வினாடி) தங்கப்பதக்கமும், பூஜா ஷாருஷி (1 மணி 12 நிமிடம் 36 வினாடி) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர சிங், ஷிவதபா ஆகியோர் தங்களது முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றனர்.

கபடி போட்டியில் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 30-17 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தையும், பெண்கள் பிரிவில் லீக் ஆட்டத்தில் இந்தியா 56-23 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்தன. கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 156 தங்கம், 85 வெள்ளி, 27 வெண்கலம் என்று மொத்தம் 268 பதக்கம் வென்று முதலிடத்தில் தொடருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top