விடைபெற்றார் மெக்கல்லம்: கடைசி ஒருநாள் போட்டியிலும் அதிரடி ஆட்டம்!

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

 மெக்கல்லம்

நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இதுதான். இதன்பிறகு நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி மெக்கல்லத்துக்கு சிறப்பான முறையில் பிரியா விடைகொடுக்க நியூஸிலாந்து அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மெக்கலமுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ‘கார்ட் ஆஃப் ஹானர்’ (இருபுறம் அணிவகுத்து நின்று) வழங்கி மரியாதை செலுத்தினார்கள்.

ஹேஸ்டிங்ஸ் வீசிய 2-வது ஓவரில் வழக்கமான அதிரடியுடன் தொடங்கிய மெக்கல்லம், மூன்று பவுண்டரிகளை விளாசினார். பிறகு போலண்ட் வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அதோடு விடவில்லை. போலண்டின் அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் மட்டும் 16 ரன்களைக் குவித்தார் மெக்கல்லம். பிறகு மிட்செல் மார்ஷின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்தவுடன் அடுத்தப் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார் மெக்கல்லம்.

முதலில் ஆடிய நியூசிலாந்து, 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top