மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.20 லட்சம் வரை இழப்பு; ஜல்லிக்கட்டு கிராமங்களுக்கு பஸ்கள் நிறுத்தம்

Captureபொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்கு தடை விதிக்க ப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரு நாள்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதிகளுக்கு இயக்க ப்படும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கடந்த 3 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களால் மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்கள் கூடுதல் லாபம் சம்பாதித்து வருகின்றன.

பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அவனியாபுரம் வழியாக காரியாபட்டி உட்பட பல்வேறு ஊர்களுக்கு, பாலமேடு, அலங்காநல்லூர் செல்லும் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு தினமும் 8500 கி.மீ. தூரத்துக்கு பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.19 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இது தவிர பொங்கல் பாண்டிகையின் போது இப்பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதுவும் தற்போது இல்லாமல் போயுள்ளதால் போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அரசு பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டதால், ஷேர் ஆட்டோக்கள் பயனடைந்து வருகின்றன. புறவழிச் சாலையில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வரை நீண்ட தூரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் சம்பத் கூறியது: ‘சாதாரண குடும்பச் சண்டையில் இருந்து அரசியல் நிகழ்வு வரை எது ஏற்பட்டாலும் முதலில் தாக்கப்படுவது அரசு பஸ்கள்தான்.

பிரச்சினையால் அரசு பஸ்களை நிறுத்தும்போது, ஷேர் ஆட்டோக்கள் பயன்பெறுகின்றன. இது பண்டிகை காலம். வருவாயை குவிக்கும் நேரம். எனவே போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் பெருக்கும் நோக்கத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top