பெரியாறு அணையில் போலீஸ் நிலையம் அமைத்த கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

2384a201-7288-4118-800c-e88dd448ec94_S_secvpfமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதில் இருந்து கேரள அரசு பல்வேறு பீதியை அம்மாநில மக்களிடம் பரப்பி வருவதோடு பல பொய்யான குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசிடம் கூறி புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது.

இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள மாநில நீர்பாசனத்துறை மந்திரி தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்து ஆய்வு பணி மேற்கொண்டார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையில் போலீஸ் நிலையம் அமைக்க முடிவு செய்து இன்று அதற்கான பணியை துவக்கியது.

கேரள அரசு போலீஸ் நிலையம் இன்று துவக்கியதற்கு முல்லைப்பெரியாறு மீட்பு குழு மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் உடைந்து விடும் என பீதியை கிளப்பி புதிய அணை கட்ட முயற்சித்தது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால் போலீஸ் நிலையம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் போலீஸ் நிலையம் கட்டியுள்ளது.

இப்பகுதியில் எந்தவித கட்டிட பணிகளும் செய்யக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தும் அதனை மீறி கேரள அரசு செயல்படுவது நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும். எனவே இதனை கண்டித்து விரைவில் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top