சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு வட மாநிலங்களில் 12 பேர் பலி; 140 பேர் படுகாயம்

வடமாநிலங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியாயினர். 140–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம், தமங்லாங் மாவட்டத்தை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று காலை 4.35 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதன் தாக்கம் அசாமிலும், பீகாரிலும் கடுமையாக உணரப்பட்டது.

திரிபுரா, மிசோரம், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய வட மாநிலங்களிலும் நிலநடுக்க அதிர்வை மக்கள் உணர்ந்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர், வங்காளதேசம், பூடான் நாடுகளிலும் உணரப்பட்டது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மணிப்பூர் தலைநகர் இம்பாலில், வீடுகளில் இருந்த பொருட்கள் தரையில் விழுந்து உருண்டன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதனால் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி எழுந்து வீடுகளை விட்டுவெளியேறி திறந்தவெளிக்கு ஓட்டம் பிடித்தனர்.

நிலநடுக்கம் தொடர்ந்து பல வினாடிகள் நீடித்ததாலும், அடுத்தடுத்து சிறு சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டதாலும் மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல்களும் ஏற்பட்டன. இம்பால் நகரில் 6 மாடி கட்டிடம் ஒன்றும், சில பள்ளிக்கூடங்களின் சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன. சாலைகளிலும் பெரும் பிளவுகள் ஏற்பட்டது.

இதன் இடிபாடுகளில் சிக்கி, மேற்கு இம்பால் மாவட்டத்தில் 4 பேரும், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஒருவரும், சேனாபதி மாவட்டத்தில் இருவரும் பலியாயினர். இது தவிர 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அசாம் மாநிலத்தின் மலிகான், கவுகாத்தி ஆகிய நகரங்களில் தலா ஒருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். 20–க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் கர்பான் டங்கா என்ற கிராமத்தில் 60 வயது ஹரிசங்கர் என்பவர் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக உயிர் இழந்தார்.

இதேபோல் மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய நகரங்களில் நில நடுக்க அதிர்ச்சியில் முதியவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

அசாம், மணிப்பூர் மாநிலங்களில் இடிபாடுகளுக்கு இடையே இன்னும் ஏராளமானோர் உயிருடன் சிக்கி உள்ளனர். இதனால், நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி மணிப்பூர் மாநிலத்தில் ஒருவாரம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மணிப்பூர், அசாம் மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விடுவதற்காக மத்திய அமைச்சரக செயலாளர் பி.கே. சின்கா தலைமையில் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அசாம் மாநிலம் சில்சார் நகருக்கு உடனடியாக அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது.

மணிப்பூரில் ராணுவ பிரிவுகள் மூலம் மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் உள்ள ராணுவம் மற்றும் விமானப்படைகளைச் சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் மணிப்பூர் விரைந்தனர்.

கவுகாத்தியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 45 பேர் உடனடியாக இம்பால் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்களும், மீட்பு பணிக்காக புறப்பட்டுச் சென்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி, அசாமில் 2 நாள் பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் போனில் தொடர்பு கொண்டு நிலநடுக்க பகுதிகளை உடனடியாக பார்வையிடும்படியும், வடகிழக்கு மாநில முதல்–மந்திரிகளுடன் பேசுமாறும் கேட்டுக்கொண்டார்.

ராஜ்நாத் சிங், கவுகாத்தியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும்’’ என்றார்.

நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இப்பகுதிகளில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்–மந்திரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top