ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது செல்லாது ; மத்திய உள்துறை அறிவிப்பால் மீண்டும் மோதல்.

கெஜ்ரிவால் அரசு 2 உயர் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு செல்லாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

மத்திய சிவில் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் மூலம் டெல்லி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் ‘டேனிக்ஸ்’ அதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

டெல்லி மாநில அரசில் பணியாற்றி வரும் இப்பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யஷ்பால் கார்க் மற்றும் சுபாஷ் சந்திரா ஆகியோரை 2 நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவால் அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

மாநில அரசு, அரசு வக்கீல்களுக்கு சம்பள உயர்வு அளித்து பிறப்பித்த கோப்பு ஒன்றில் இந்த 2 அதிகாரிகளும் கையெழுத்திட மறுத்ததால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

எனினும், இந்த இடைநீக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்றால், அதிகாரிகள் இருவரும் இப்பிரச்சினையை மாநில முதல்–மந்திரியிடம்(கெஜ்ரிவால்) கொண்டு செல்லலாம். கவர்னர் நஜீப் ஜங்கிடம் கொண்டு போகக்கூடாது என்று மாநில உள்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் ‘டெல்லி மாநில அரசில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் இருவரை இடைநீக்கம் செய்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது. டெல்லி மாநில கவர்னர் அளித்த பரிந்துரை குறிப்பை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே இந்த 2 அதிகாரிகளும் தொடர்ந்து பணியில் இருப்பதாகவே கருத்தில் கொள்ளவேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

டேனிக்ஸ் அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றுத்தான் கவர்னரே கூட இடைநீக்கம் செய்ய முடியும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, டெல்லி மாநில அரசில் பணியாற்றி வரும் 200 டேனிக்ஸ் அதிகாரிகள் கெஜ்ரிவால் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று ஒட்டுமொத்த விடுப்பில் சென்றனர். மேலும் 70 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரை நாள் விடுப்பில் சென்றனர்.

இதனால் மாநில அரசின் அலுவலக பணிகள் நேற்று பெரிதும் முடங்கியது. ஆனால் மாநில உள்துறை மந்திரி சத்யேந்திர சிங் கூறும்போது, ‘‘உயர் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிகாரிகள் இதுபோல் வேலை நிறுத்தம் செய்வது சட்டத்துக்கு புறம்பானது’’ என்று குறிப்பிட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில அரசு இடைநீக்கம் செய்ததை மத்திய உள்துறை அமைச்சகம் செல்லாது என்று அறிவித்து இருப்பதால் மீண்டும் முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மத்திய அரசு இடையே மோதல் வெடித்து இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top