அர்விந்த் கேஜ்ரிவால் மீது அருண் ஜேட்லி அவதூறு வழக்கு!

அருண் ஜேட்லிதன் மீது தவறான அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 பேர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி தன் மீது அவதூறு பரப்பியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் ஜேட்லி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக அருண் ஜேட்லி இருந்த 13 ஆண்டு காலத்தில், பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

‘குறிப்பாக அணி தேர்வின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தவிர போலி நிறுவனங்களின் பெயர்களில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜேட்லி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து நியாயமான நேர்மையான விசாரணை நடை பெற, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ஜேட்லியிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறவேண்டும்.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தை புனரமைக்க ரூ.24 கோடி ஒதுக்கப்பட் டது. ஆனால், கூடுதலாக ரூ.90 கோடி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணம் எங்கு போனது?

ஒரே பெயரில் ஒரே முகவரியில் ஒரே இயக்குநர் பெயரில் உள்ள 5 நிறுவனங்களுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. செய்யாத வேலைக்கு அந்த நிறுவனங்களுக்கு பணம் கொடுத்ததாக போலியாக கணக்கு காட்டி உள்ளனர்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைப்பதற்கும், டிடிசிஏ ஊழல் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்லவுமே தலைமை செயலகத்தில் திடீரென சிபிஐ சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எங்களுக்கு மட்டுமல்லாமல், அவருடைய கட்சித் தலைவர்களுக்கும் ஜேட்லி பதில் அளிக்க வேண்டும். பதில் சொல்வதுடன் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஜேட்லி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட 6 பேருக்கு எதிராக சிவில் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top