பாக். படகு மூழ்கடிக்கப்பட்டது குறித்து நேர்மாறாக கருத்து கடலோரக் காவல்படை டிஐஜி பணிநீக்கம்

குஜராத் மாநில கடற்பகுதியில் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று பாகிஸ்தானில் இருந்து வந்த மர்மப் படகு மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்துக்கு நேர்மாறாக கருத்து தெரிவித்ததற்காக கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி.யான பி.கே. லோஷாலி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் கடலோரக் காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “லோஷாலி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றவாளி என்பது விசாரணை வாரியத்தால் சனிக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்து லோஷாலி நீக்கப்பட்டுள்ளார்’ என்றார்.
குஜராத் கடற்பகுதியில் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று வெடி பொருள்களை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானில் இருந்து மர்மப் படகு ஒன்று வந்தது. அந்த படகை இந்திய கடலோரக் காவல்படையினர் தடுத்து நிறுத்தியபோது, அது வெடித்துச் சிதறியது. அப்போது அந்தப் படகில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்தபோது, படகில் இருந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்த பயங்கரவாதிகள் என்றார். மேலும், இந்திய கடலோரக் காவல்படையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக 4 பேரும், படகுக்கு தீ வைத்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டதாக பாரிக்கர் தெரிவித்தார்.
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லோஷாலி, அந்தப் படகைத் தகர்க்கும்படி கடற்படையினருக்கு தாமே உத்தரவிட்டதாகவும், படகில் இருந்தவர்களுக்கு பிரியாணி விருந்தளிக்க தாம் விரும்பவில்லை என்றும் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top