தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தண்ணீர் வடியாத நிலையில் மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்கானம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் கன மழையும் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் செஞ்சி ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.
ஈரோடு மாவட்டம் பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் கனழை பெய்தது. மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயிகள் மழை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி, புள்ளம்பாடி, டால்மியாபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.