தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி செல்கிறது

வடதமிழகம் அருகே உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆந்திரா நோக்கி செல்வதால், தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் வடமாவட்டங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. தென் மாவட்டங்களில் மழை அந்த அளவுக்கு பெய்யவில்லை.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன. ஆங்காங்கே மழை நீர் வெள்ளம்போல ரோடுகளில் 2 அடி உயரத்திற்கு மேல் ஓடுகிறது.

இந்த நிலையில் வடதமிழகம் அருகே நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி திசை மாறி ஆந்திரா மாநிலம் நோக்கி செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழை அளவு குறையும்.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே நாளில் 37 செ.மீ.மழை பெய்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் நகர்ந்து தென் கடலோர ஆந்திரா பகுதிக்கு செல்கிறது.

எனவே தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும் மற்ற மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். ஆனால் தமிழ்நாட்டில் படிப்படியாக மழையின் அளவு குறையும்.

ஆந்திராவில் மழையின் அளவு அதிகரிக்கும். தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா நோக்கிச் செல்ல உள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமழை காலம் அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையாகும். இந்த காலத்தில் தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய சராசரி மழை 44 செ.மீ. ஆனால் இதுவரை 38.3 செ.மீ.மழை பெய்துள்ளது. இன்னும் பெய்யவேண்டியது 6 செ.மீ. மழை தான்.

சென்னை மாவட்டத்தில் இந்த பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சாராசரி மழை 85 செ.மீ. ஆனால் 91 செ.மீ.மழை பெய்துள்ளது. அதாவது இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top