வண்ணாரப்பேட்டை- ஐகோர்ட் இடையே மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நிறைவு!

metroworkசென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும் 45 கி.மீ. தூரத்துக்கு 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் சென்னையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 13 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி ரயில் நிலையம், ஷெனாய் நகரில் இருந்து அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், நேரு பூங்காவில் இருந்து எழும்பூர், மே தின பூங்காவில் இருந்து புதிய தலைமை செயலகம், சைதாப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் 2 வழித் தடங்களிலும் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது.

தற்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி ரயில் நிலையத்தை கடந்து உயர்நீதிமன்றம் ரயில் நிலையம் வரை இரண்டு வழித் தடங்களிலும் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் உயர் அதிகாரி கூறும்போது, “வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி ரயில் நிலையத்தை தாண்டி உயர்நீதிமன்றம் வரை இரண்டு வழித் தடங்களில் சுமார் 4,100 மீட்டர் தூரம் சுரங்கம் நேற்று தோண்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணி விரைவில் துவங்கும்.

இதேபோல கிண்டி  ஆலந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உயர்த்தப்பட்ட (மேம்பாலம்) பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு இடையே மிகவும் உயரமான இடத்தில் 177.3 மீட்டர் நீளத்துக்கு இரண்டு தூண்களை இணைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தாமல், மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது மிகவும் சவாலாக இருந்தது. மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபெற்று வந்த பாலம் பணிகளும் தற்போது முடிந்துள்ளது. அங்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top