வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் தமிழகத்தை நோக்கி நகருகிறது மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிப்பு

saதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

தற்போது இந்த பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. நெய்வேலியில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும் நல்ல மழை பெய்தது.

இந்த நிலையில், வங்க கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் இரவு விடிய, விடிய மழை கொட்டியது.

நேற்று பகலிலும் மழை நீடித்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறி சென்னை நகரமே தத்தளிக்கிறது. தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

சாலைகளில் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில வாகனங்கள் நடுவழியில் நின்றன.

இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் பெரிதும் சிரமப்பட்டார்கள். பல இடங்களில் வாகனங்கள் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டன. சில இடங்களில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய அரபிக்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதேபோல், நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ளபகுதியில் நீடிக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலை சனிக்கிழமை (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை (இன்று) மழை பெய்யும்.


வட மாவட்டங்கள் மற்றும் எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் அனேக இடங்களில் தொடர் மழையாகவோ அல்லது கனமழையாகவோ பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து மேற்கு நோக்கி நகருவதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும். மழை அளவும் அதிகரிக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய வட மாவட்டங்களில் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நல்ல மழை இருக்கும். தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top