தீபாவளிபண்டிகையையொட்டி சிவகாசிபட்டாசுவிற்பனை இந்தஆண்டு அமோகமாக நடந்துள்ளது

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி பட்டாசு விற்பனை இந்த ஆண்டு அமோகமாக நடந்துள்ளது. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால் சீன பட்டாசுகள் விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டதாக ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நாட்டில் விற்பனையாகும் மொத்தப் பட்டாசுகளில், 95 சதவீதம் சிவகாசியில்தான் உற்பத்தியாகின்றன. வட மாநிலங்களில் கடந்த ஆண்டு சிவகாசி பட்டாசு விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது. அதிக அளவு பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததால் இந்த ஆண்டுக்கான ஆர்டர்களை குறைத்துவிட்டனர். இதனால், சிவகாசி ஆலைகளில் ஆண்டின் துவக்கம் முதலே பட்டாசு உற்பத்தி மந்தமாகவே இருந்தது.தீபாவளிக்கான பிந்தைய ஆர்டர்களும் போதிய அளவில் வரவில்லை. இதனால். தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்பட்டனர்.

இதற்கிடையே, முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட சீன பட்டாசுகள் வட மாநிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டதால், சிவகாசி பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என ஆலை உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பஞ்சாப், மகாராஷ்டிரா மாநில துறைமுகங்களில் நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகையன்று விற்பனை செய்ய மேலும் 2 ஆயிரம் கன்டெய்னர்களில் வந்திறங்கிய சீன பட்டாசுகள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள், மத்திய வர்த்தக அமைச்சரிடம் புகார் செய்தனர். இதையடுத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக் கை அனுப்பி, சீன பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் வட மாநிலங்களில் சீன பட்டாசு விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டது.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நேற்று (நவ. 11) தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு சிவகாசி பட்டாசு விற்பனை அமோகமாக நடந்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டாசு விற்பனையில் பாதிப்பு இருந்தாலும், தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தமிழகத்தில் கனமழையால் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், நாமக்கல் போன்ற இடங்களில் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மற்ற இடங்களில் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.சிவகாசி பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஃபாமா) துணைத் தலைவர் காமராஜ் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சீன பட்டாசு நூறு சதவீதம் விற்பனை செய்யப்படவில்லை. மழை காரணமாக தமிழகத்தில் ஒரு சில ஊர்களில் பட்டாசு விற்பனை பாதிப்படைந்தது. மற்ற ஊர்களில் விற்பனை நன்றாகவே இருந்தது. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையால், ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சீன பட்டாசுகளை வியாபாரிகளால் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை,’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top