சீக்கியக் கலவர வழக்கு: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

soniagandhiகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா வந்தது, வெளியேறியது தொடர்பான குடியுரிமை துறையின் முத்திரைகளை சரிபார்ப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டின் நகலை ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதால் நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற மனித உரிமை அமைப்பினர் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க்கின் புரூக்ளின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட மனுவில், 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்.

எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்லோன் கெட்டரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த சோனியா காந்தியிடம் இந்த சம்மனை நீதிமன்றம் ஊழியர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி வழங்கினர்.

இந்த சம்மன் அளித்து 4 மாதங்கள் ஆகியும் சோனியா காந்தி தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கு உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி தனது விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிட்ட சோனியாவின் வழக்கறிஞர், சம்மன் வழங்கப்பட்டதாக கூறப்படும் தேதியில் சோனியா காந்தி அமெரிக்காவில் இல்லை என்று கடந்த ஜனவரி 10ஆம் தேதி விளக்கமளித்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சோனியா தரப்பு வழக்கறிஞரின் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி ப்ரெயன் எம்.கோகன், சம்மன் வழங்கப்பட்டபோது சோனியா காந்தி அமெரிக்காவில் தங்கியிருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் அமெரிக்கா வந்தது, அமெரிக்காவை விட்டு வெளியேறியது தொடர்பான குடியுரிமை துறையின் முத்திரைகளை சரிபார்ப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டின் நகலை ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top