தொடர்ச்சியான பகுப்பாய்வுகளின் அடிப்படையில்தான் மூடீஸ் அனலிட்டிக்ஸ் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது மத்திய அரசுக்கு மூடீஸ் பதில்

moodys_2609676fஇந்தியாவை எச்சரித்த ஆய்வறிக்கை முடிவுகளை, ‘மூடீஸ் நிறுவனத்தின் ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்து’ என்று மத்திய அரசு காட்டமாகக் கூறியிருப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளித்துள்ளது.

தங்களின் ஆய்வறிக்கையில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களும் நம்பகத்தன்மை மிக்கதே என்று மூடீஸ் நிறுவனம் தமது நிலைப்பாட்டை உறுதியானதாகப் பதிவு செய்துள்ளது.

எழுத்தாளர் கல்புர்கி கொலை, மாட்டிறைச்சி விவகாரம், ‘சகிப்பின்மை’ உள்ளிட்ட பிரச்சினைகளின் பின்னணியில், ‘சர்ச்சையை தடுத்து நிறுத்துங்கள்; இல்லையெனில், இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா தனது மதிப்பை இழக்க நேரிடும்’ என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்ட அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாக தெரிகிறது. அதையொட்டித்தான் வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி அரசு எந்தப் பாதையில் செல்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத் தொடங்கியிருக்கிறது

மூடீஸ் அனலிடிக்ஸை மேற்கோள் காட்டி, பல்வேறு செய்திகளும் அலசல் கட்டுரைகளும் பத்திரிகைகளில் வெளியாகின. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மூடீஸ் ஆய்வறிக்கையை நிராகிரித்த பிரதமர் அலுவலகம், அந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மை மீது சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “மூடீஸ் அனலிடிக்ஸில் பணியாற்றும் ஜூனியர் அசோசியேட் பொருளாதார ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்தை இந்திய ஊடகங்களின் சில பகுதியினர் திரித்து பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டது வருந்தத்தக்கது.

ஊடகத்தினர் மூடீஸ் அனலிடிக்ஸ் என்பது ஒரு தரவு மற்றும் ஆய்வு நிறுவனம் மட்டுமே என்பதையும் மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ் என்ற நிறுவனமே தரநிலைகளை வழங்கும் நிறுவனம் என்பதையும் வேறுபடுத்திப் பார்க்காதது ஆச்சரியமளிக்கிறது.

மேலும், எந்த வித உரிய சிரத்தையுமில்லாமல், மூடீஸ் அனலிடிக்ஸ் என்பதற்கும் மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ் என்பதற்குமான வித்தியாசத்தை வாசகர்களுக்கு தெரிவிக்கவில்லை. மூடீஸ் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் கருத்து மூடீஸ் கருத்தாக ஊடகம் நெடுக அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்து தர நிர்ணய நிறுவனத்தின் இந்தியாவை பற்றிய வருணனையாக, தாங்கள் விரும்பும் கதையாடலை சித்தரிக்க பயன்படுத்தப்பட்டதை அரசு துயரத்துடன் பார்க்கிறது” என்று அந்த செய்திக் குறிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிராகரிப்பு குறித்து மூடீஸ் நிறுவனத்திடம் கேட்டதற்கு, அந்நிறுவனம் விளக்கக் குறிப்பு அனுப்பியுள்ளது.

அதில், தங்களது தொடர்ச்சியான பகுப்பாய்வுகளின் அடிப்படையில்தான் மூடீஸ் அனலிட்டிக்ஸ் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது என்று, அது தனிப்பட்ட நபரின் கருத்து அல்ல என்றும் மூடீஸ் தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் ஆய்வறிக்கையில், அரசியல் நிகழ்வுகளையொட்டிய பொருளாதார விளைவுகள் பற்றியும் கருத்தில்கொள்ளப்பட்டு, அதைக் குறிப்பிடும் பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் நோக்கத்தையும் கொண்டு ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் மூடீஸ் விளக்கம் அளித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top