நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளமும் இணைய முடிவு: இரு கட்சித் தலைவர்களும் பேச்சு

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

கடந்த காலங்களில் பரம விரோதிகளாக இருந்த இந்த 2 கட்சிகளும் பொது எதிரியான பா.ஜனதாவை வீழ்த்த பீகார் சட்டசபை தேர்தலில் ஒன்று சேர்ந்து கை கோர்த்துள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 100 தொகுதிகளில் சரிசமமாக போட்டி போடுகின்றன.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவு வருகிற 8–ந்தேதி வெளியாக உள்ளன. இதில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் இரு கட்சிகளின் கூட்டணி மந்திரிசபையே அமையும். ஒருவேளை தோல்வியை தழுவினால் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் ஒரே கட்சியாக இணைய முடிவு செய்துள்ளன.

இந்த மெகா கூட்டணி வெற்றி பெற்றால் நிதீஷ் குமார் மீண்டும் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்பார். அவர் ஆட்சிக்கு லல்லுபிரசாத் கட்சியால் பின்னாளில் இடையூறு வந்து விடக்கூடாது என்று கருதும் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர்கள் ராஷ்ட்டீரிய ஜனதா தளம் கட்சியை இணைத்துக் கொள்ளும் யோசனைக்கு முன் வந்துள்ளனர்.

கடந்த 2 மாதமாக இரு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்ததால் அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இரு கட்சிகளும் இணைவதில் பெரிய அளவில் தடை எதுவும் இல்லை. ஆகையால் நாங்கள் இதுதொடர்பாக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளோம் என்று ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சிகளை இணைப்பது குறித்து சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும், ராஷ்டீரிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும் சந்தித்து பேசினார்கள். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர்கள் சிலரும் இந்த இணைப்பை விரும்புவதால் லல்லுபிரசாத் யாதவும் சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

67 வயதாகும் லல்லுபிரசாத் யாதவ் குற்றவழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் மீண்டும் முதல்–மந்திரி ஆக முடியாத நிலையில் உள்ளார். எனவே அவர் டெல்லி அரசியிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இணையும் பட்சத்தில் டெல்லியில் தனக்கு வலுவான நிலை கிடைக்கும் என்று லல்லு நம்புகிறார். மேலும் பீகாரில் தன் மகன்கள் அரசியலுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க முடியும் என்று நினைக்கிறார்.

ஆகையால் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இன்னும் சில மாதங்களில் இணைந்து ஒரே கட்சியாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top