என்னுடைய நேர்மை, ஒழுக்கம் பற்றி தங்கபாலு பேசி இருக்கிறார். அவர் சொத்து சேர்த்தது பற்றி என்னுடன் நேரில் விவாதிக்க தயாரா?: இளங்கோவன் சவால்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:–

என்னுடைய நேர்மை, ஒழுக்கம் பற்றி தங்கபாலு பேசி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி அவர் கூறியிருப்பதால் அதற்கு நானும் பதில் சொல்கிறேன்.
முதலில் இந்த தங்கபாலு யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இவர் “கவிஞர் தங்கபாலு” என்று இருந்தார்.
டெல்லியில் உள்ள ரங்கராஜன் குமாரமங்கலம் வீட்டுக்கு இவர் முதன் முதலில் “கவிஞர் தங்கபாலு” என்று சொல்லி கொண்டு தான் வந்தார். பிறகே அவருக்கு கட்சியில் பதவிகள் கிடைத்தன.

எனது நேர்மையைப் பற்றி தங்கபாலு சந்தேகம் எழுப்பியுள்ளார். எனது குடும்பம் எந்த அளவுக்கு சொத்து வைத்திருந்தது என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லாருக்கும் தெரியும்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு எனக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தது? நான் அரசியலுக்கு வந்த பிறகு எவ்வளவு சொத்துக்கள் குறைந்தது என்பதை நான் ஆதாரப்பூர்வமாக வெளியிடத்தயாராக இருக்கிறேன்.

எனது சொத்துக்களே எனது நேர்மையை தெள்ளத்தெளிவாக சொல்லும். அதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

ஆனால் தங்கபாலு அரசியலுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தார்? அரசியலுக்கு வந்த பிறகு எவ்வளவு சொத்துக்களுடன் இருக்கிறார்? என்பது பற்றி விளக்கம் வெளியிடத்தயாரா?
கவிஞர் தங்கபாலுக்கு திடீரென எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன? அவர் என்ன கண்ணதாசன் போல கவிதைகள் எழுதியா இத்தனை சொத்துக்களையும் சம்பாதித்தார்?
சேலத்தில் இருந்து அவர் திருட்டு ரெயில் ஏறித்தான் சென்னை வந்தார். அப்படி வந்தவருக்கு இன்று சென்னையில் சொந்தமாக பொறியியல் கல்லூரி உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுரங்கங்கள் உள்ளன.

கேரளாவிலும் கூட அவருக்கு சொத்துக்கள் உள்ளது. அது மட்டுமல்ல அவர் புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்.
அவருக்கு நெருக்கமான முருகானந்தம் என்பவர் இதற்கான ஆதாரங்களை எல்லாம் என்னிடம் கொடுத்துள்ளார். தேவையெனில் அவற்றை உரிய நேரத்தில் வெளியிட நான் தயாராக இருக்கிறேன்.

என்னுடைய நேர்மையை பற்றி மட்டுமல்ல ஒழுக்கம் பற்றியும் தங்கபாலு பேசியுள்ளார். இவர் எந்த அளவுக்கு ஒழுக்கமானவர் என்பதற்கு பல நிகழ்வுகள் உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் அவர் தனது மனைவியையே ஏமாற்றினார். இதுபற்றி கூட நான் விரிவாக பேச தயாராக உள்ளேன்.
எனவே எனது நேர்மை, ஒழுக்கம் பற்றி இனியும் தங்கபாலு பேச தயாராக இருந்தால் நானும் விவாதிக்க தயாராக உள்ளேன். அவர் தயாரா?
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top