கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி!

kovanமூடு டாஸ்மாக்கை மூடு”  பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மது ஒழிப்பை வலியுறுத்தி, ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு  சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள்,  முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்வதாகக் கூறி பாடகர் கோவனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசத் துரோக வழக்கில், கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கோவனின் நண்பர் வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கோவன் கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. அவரை சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். கோவனை விடுதலை செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோவன் கைது சம்பவத்தில் போலீசார் சட்டப்படி நடந்துள்ளனர். சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, முறையாக கைது செய்துள்ளனர். இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கைது நடவடிக்கையில் விதிமீறல் எதுவும் இல்லை என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறோம். கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தை மனுதாரர் அணுகலாம்” என்று தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top