நிதி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சீனா – ஜெர்மனி இடையே 13 ஒப்பந்தங்கள் கையெழுத்து

632நிதி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் சீனாவும், ஜெர்மனியும் 13 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் எட்டாவது முறையாக சீனாவுக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டார். அவருக்கு சீனப் பிரதமர் லீ கெகியாங் உற்சாக வரவேற்பளித்தார்.
அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் இரு தரப்பு உறவு மற்றும் உலக விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளிடையே உயர்நிலையிலான சந்திப்புகளை அடிக்கடி நடத்துவது, பல்வேறு துறைகளில் பரிமாற்றங்களை மேற்கொள்வது, சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நிதி, போக்குவரத்து, தகவல்தொடர்பு, சுகாதாரச் சேவை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்ப்பது தொடர்பான 13 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்று சீனாவின் அரசு ஊடகமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகத் திகழும் சீனா, ஐரோப்பிய ஒன்றிய நிறுவனமான ஏர்-பஸ்ஸிடம் இருந்து 1,700 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்பில் 130 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. உலக அளவில் விமானங்களை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடாகவும் சீனா விளங்குகிறது.
ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் சீனாவுடன் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கு, சீனாவுடன் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இந்த நாடுகளின் நோக்கமே காரணமாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top