சென்னையில் இடியுடன் கூடிய கனமழை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

 

இந்தியாவில் வடகிழக்கு பருவமழையை பெரிதும் நம்பி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஏன் என்றால் மற்ற மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும். ஆனால் தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சிறிதளவுதான் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் தமிழ்நாட்டில் பெய்யும். தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை நின்று விட்டது. தென் மேற்கு பருவமழை சராசரி அளவு பெய்துள்ளது. கடந்த 3 வருடங்களாக வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யவில்லை. அதாவது போதிய அளவுக்கு பெய்யவில்லை.

 

விவசாயம் நன்றாக இருக்கவேண்டும் பயிர்கள் நன்றாக விளையவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

வடகிழக்கு பருவமழையின் அளவை அளக்கும் காலம் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையாகும். ஆனால் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20-ந்தேதி தான் சராசரியாக தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 20-ந்தேதிக்கு முன்பாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. ஆனால் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை, சராசரி தேதியை விட ஒரு வாரத்திற்கு மேல் தள்ளிப்போய் நேற்று தொடங்கியது.

 

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி மழை பெய்து வருகிறது.

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, சென்னை சென்டரல், எழும்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்யும் கனமழையின் காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது மழை வெளுத்து வாங்குகிறது. மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக மக்கள் எதனையும் தங்களுடன் எடுத்து செல்லவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் நனைந்தவாறே சாலையில் செல்வதை காணமுடிந்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top