ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஆட்டத்தில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

தொடரை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா–தென்ஆப்பிரிக்க அணிகள் இன்று மும்பையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பூரில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 3–வது ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றன. அதே சமயம் இந்திய அணி இந்தூரில் நடந்த 2–வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 4–வது ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையை எட்டி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்த இந்திய அணி, அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க இதுவே அருமையான சந்தர்ப்பமாகும். சென்னையில் கிடைத்த வெற்றியால் உத்வேகமும், புத்துணர்ச்சியும் அடைந்துள்ள இந்திய வீரர்கள் அதே வேகத்தை கடைசி ஆட்டதிலும் தொடர்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். மோசமாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவும் கடந்த ஆட்டத்தில் அரைசதம் எடுத்து பார்முக்கு திரும்பி விட்டார். ஷிகர் தவானின் பேட்டிங் மட்டுமே கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

இந்த தொடரில் இதுவரை 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் கடைசி ஆட்டத்திலாவது கைகொடுப்பாரா? என்பதை பார்க்கலாம். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் முந்தைய போட்டியில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அதே போன்று இந்த முறையும் அவர்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தால், நமது கை நிச்சயம் ஓங்கும். உள்ளூர் சூழல் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகும்.

 

தென்ஆப்பிரிக்காவும் கோப்பையை வசப்படுத்துவதற்காக முழுமூச்சுடன் ஆயத்தமாகி வருகிறது. அந்த அணியின் ‘சூறாவளி’ கேப்டன் டிவில்லியர்ஸ் இந்த தொடரில் 2 சதங்கள் விளாசி இருக்கிறார். ஹஷிம் அம்லாவும் (இதுவரை 66 ரன்கள் எடுத்துள்ளார்) பார்முக்கு திரும்பினால் அந்த அணி இன்னும் வலுவடையும்.

கையில் ஏற்பட்ட காயத்தால் ஆல்–ரவுண்டர் டுமினி கடைசி இரு ஆட்டங்களில் இருந்து ஏற்கனவே விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் 3–வது ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் 4–வது ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய மோதலிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. இது தான் அந்த அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. என்றாலும் சரிவில் இருந்து மீளும் அசாத்திய திறமை கொண்டது தென்ஆப்பிரிக்கா என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

 

தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா நேற்று அளித்த பேட்டியில், ‘மோர்னே மோர்கல் சிறிது நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் இன்றைய ஆட்டத்திற்கு ஏற்ப அவர் முழு உடல்தகுதியுடன் இருப்பார் என்று நான் கருதவில்லை. டுமினியின் விலகல், சரியான கலவையில் அமைந்த அணியில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த ஆட்டத்தில் நெருக்கடியை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும். ஆட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும்’ என்றார். தென்ஆப்பிரிக்க அணி இதற்கு முன்பு 4 முறை இந்திய மண்ணில் நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடியும் ஒரு தடவையும் கோப்பையை முகர்ந்ததில்லை. எனவே புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளது.

மொத்தத்தில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் வரிந்து கட்டி நிற்பதால், போட்டியில் அனல் பறக்கும் என்று நம்பலாம். மேலும் தொடரில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதில் டிவில்லியர்ஸ் (239 ரன்), ரோகித் சர்மா (239 ரன்), விராட் கோலி (238 ரன்) ஆகியோர் இடையே நிலவும் போட்டியும் சுவாரஸ்யமான அம்சமாகும். நடந்து முடிந்துள்ள 4 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ஹர்பஜன்சிங், அமித் மிஸ்ரா, அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், மொகித் ஷர்மா அல்லது எஸ்.அரவிந்த்.

தென்ஆப்பிரிக்கா: அம்லா, குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், டிவில்லியர்ஸ் (கேப்டன்), பெஹர்டைன், டேவிட் மில்லர் அல்லது டீன் எல்கர், கிறிஸ் மோரிஸ், ஸ்டெயின், இம்ரான் தாஹிர், ரபடா, ஆரோன் பாங்கிசோ.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 

*இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் தொடரில், தொடரை முடிவு செய்யும் கடைசி ஆட்டத்தில் கச்சிதகமாக செயல்படுவதில் தென்ஆப்பிரிக்க அணியே சிறந்த வெற்றி சராசரியை கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. இவ்வாறான 13 ஆட்டங்களில் 10–ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது. 3–ல் தோல்வி கண்டிருக்கிறது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் 21 ஆட்டங்களில் 11–ல் வெற்றியும், 9–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

*5 அல்லது அதற்கு மேல் ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக 2009–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2–4 என்ற கணக்கில் தோற்றிருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக 7 தொடர்களை நமது அணி உள்ளூரில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

*இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றிக்கனியை பறித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் மேற்கொள்ளும் அணியே வெற்றி கண்டால், 5 மற்றும் அதற்கு மேல் ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்ற 2–வது நிகழ்வாக இது அமையும். 2013–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 4–1 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்தது. இந்த தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருந்தது.

 

போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் இந்தியாவுக்கு ஓரளவு ராசியானது என்றே சொல்லலாம். இங்கு இதுவரை நடந்துள்ள 19 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 11 முறையும், 2–வது பேட் செய்த அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி இங்கு 16 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 10–ல் வெற்றியும், 6–ல் தோல்வியும் கண்டுள்ளது.

இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இங்கு 3 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. மூன்றிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கிறது. 1996–ம் ஆண்டு நடந்த ஆட்டங்களில் 35 ரன்கள், 75 ரன்கள் வித்தியாசத்திலும், 2005–ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்காவை பதம் பார்த்து இருந்தது. 2003–ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்றதில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top