2 ஆண்டு தடை எதிரொலி: புதிய ஐ.பி.எல். அணியில் டோனி விளையாடுகிறார்

277bd5a9-8460-41d6-b2d3-04ac40fc94e5_S_secvpfஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இந்த 8 ஐ.பி.எல். போட்டியிலும் இந்திய அணி கேப்டன் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடி இருக்கிறார். ஜார்க்கண்டை சேர்ந்த அவருக்கு சென்னை 2–வது தாய் வீடாக கருதப்படுகிறது.

2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அறிமுக ஏலத்தில் டோனியை ரூ.7½ கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. அதிக விலை ஏலத்தில் எடுக்கப்பட்ட சாதனை வீரர் ஆவார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை ஐ.பி.எல். கோப்பையையும் (2010, 2011) 2 தடவை சாம்பியன்ஸ் ‘லீக்’ கோப்பையையும் (2010, 2014) கைப்பற்றியது.

இதற்கிடையே ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியில் இந்த நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.

இதன் காரணமாக 2016, 2017–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் இந்த இரு அணிகளும் விளையாட முடியாது. 2018–ம் ஆண்டில் இருந்து இந்த அணிகள் விளையாடலாம். இந்த 2 அணிகளுக்கும் பதிலாக இரண்டு ஆண்டுக்கு புதிய அணிகள் ஏலத்தில் எடுக்கப்படுகிறது.

சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாடாமல் ஒதுங்கி இருக்கலாம் என்ற நிலையில் இருந்தார். அவரது முடிவில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஐ.பி.எல். அணியில் விளையாட அவர் முடிவு எடுத்துள்ளதாக நம்பதகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 ஆண்டுக்கு மட்டுமே டோனி புதிய அணியில் விளையாடுவார். அதன் பிறகு அவர் மீண்டும் சென்னை அணிக்கே திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது. ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கு இந்திய அணி கேப்டனாக டோனி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து முன்னணி வீரர்கள் 6 பேர் புதிய ஐ.பி.எல். அணிகளில் நேரடியாக ஒப்பந்தம் ஆவார்கள். மீதியுள்ள வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top