சிறு சம்பவங்களை மிகைப்படுத்துவதா? நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் கண்டனம்

wqawசிறு சம்பவங்களை மிகைப்படுத்துகிறார்கள். இருந்தாலும், நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் பசு மாமிசம் சாப்பிட்டதாக கூறப்பட்ட ஒரு வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து வைத்த எம்.எல்.ஏ. தாக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி, சிவசேனா கட்சியினரின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் மந்திரியை அழைத்து விழா நடத்திய சுதீந்திர குல்கர்னி முகத்தில் சிவசேனா கட்சியினர் கருப்பு பெயிண்ட் பூசினர். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் உரை, தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், மோகன் பகவத் பேசியதாவது:–

நாட்டில் சிறு சிறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவற்றை மிகைப்படுத்தி, பெரிய அளவில் காட்டுகிறார்கள். இந்த சிறு சம்பவங்களால், இந்திய கலாசாரத்தையோ, இந்து கலாசாரத்தையோ சிதைக்க முடியாது. மிக பழங்காலத்தில் இருந்தே வேற்றுமைகளை இந்து கலாசாரம் மதித்தே வந்துள்ளது. வேற்றுமைகளை ஒருங்கிணைத்து ஒற்றுமையை நிலைநாட்டி வருகிறது. அதுதான் இந்துத்துவா.

நமது நாடு ஒன்றாக இருந்தது. இனியும், ஒன்றாகவே இருக்கும். இந்துத்துவா அடிப்படையில் நாட்டை ஒன்றுபடுத்தும் பணியில் கடந்த 90 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏமாற்றமான மனநிலையில் நாடு இருந்தது. ஆனால், தற்போதைய மத்திய அரசின் துரிதமான நடவடிக்கைகளால், நம்பிக்கையான சூழ்நிலை பிறந்துள்ளது. நாட்டின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. இனி நமக்கு கவலை இல்லை.

தூய்மை இந்தியா, முத்ரா வங்கி, ஜன் தன் யோஜனா, கியாஸ் மானியம் விட்டுக்கொடுத்தல் போன்ற திட்டங்கள் நல்ல அறிகுறியாக உள்ளன. இருப்பினும், பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்காக, அரசியல் சட்டத்தில் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டை புகுத்தினார். மக்கள்தொகையை கட்டுப்படுத்த நாட்டில் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான மக்கள்தொகை கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

மக்கள்தொகை கூடும்போது, நாட்டின் சுமையும் கூடுகிறது. மக்கள்தொகை வளர்ச்சி, ஒரு சொத்தாகவும் இருக்கலாம். ஆனால், சாப்பிடுவதற்கு நிறைய வாய்கள் இருக்கும்போது, வேலை செய்வதற்கும் நிறைய கைகள் தேவைப்படும். அதற்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு திட்டமிட வேண்டும். பிறகு எப்படி மக்களுக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்கப் போகிறோம்?

மக்கள்தொகையை வெறும் சட்டங்களால் கட்டுப்படுத்திவிட முடியாது. மக்களின் மனப்பான்மையை மாற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

விரோத மனப்பான்மை கொண்ட பாகிஸ்தானாலும், எல்லையை விரிவுபடுத்தும் சீனாவாலும் நமது நாட்டின் வெளிநாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் வளர்ந்து வருகின்றன. நம் நாட்டு இளைஞர்கள் சிலரே ஐ.எஸ். இயக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

பிற நாடுகள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, இந்தியா நன்றாக உதவி செய்துள்ளது. பிற நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டும்போது நமது நலன்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போதைய அரசு செய்து வருகிறது. இந்தியாவின் யோகா, பகவத்கீதை போன்றவற்றை உலகமே பேசி வருகிறது.

இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top