தென்னாப்ரிக்காவுடனான கிரிக்கெட் தொடர்: விராட் கோலியின் அபார ஆட்டத்தில் இந்தியா வெற்றி

cricketதென்னாப்பிரிக்க அணியுடனான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலியின் உத்வேகமான சதமும், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சும் சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஷீகர் தவான் 7 ரன்களிலும், ரோகித் ஷர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

விராட் கோலி- ரஹானே இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. ரஹானே 45 ரன்கள் எடுத்தார். பின்னர் கோலியுடன் இணைந்த சுரேஷ் ரெய்னா-வும் ரன்வேட்டை நடத்தினார். வேகமாக ரன்கள் சேர்த்த விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 23-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ரெய்னா 52 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். கோலி 140 பந்துகளில் 138 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது.

300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஆம்லா 7 ரன்களிலும், டி காக் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

டூ பிளஸ்ஸி, மில்லர், பெஹர்தீன், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் குறுகிய இடைவெளிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். எனினும் மற்றொரு முனையில் வேகமாக ரன்கள் சேர்த்த கேப்டன் டி வில்லியர்ஸ் 98 பந்துகளில், தமது 22-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கிய டி வில்லியர்ஸ், புவனேஷ்வர் குமாரின் பவுன்சர் பந்துவீச்சில் வெளியேறினார். 107 பந்துகளில் 112 ரன்களை அவர் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கியது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அசத்தல் சதத்தால் ரசிகர்களை மகிழ்வித்த விராட் கோலி, ஆட்டநாயகன் விருதை வென்றார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.

தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி மும்பையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top