இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை!

ruki fernando இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட இரு மனித உரிமை ஆர்வலர்களை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.

இலங்கையில் கிறிஸ்துவ பாதிரியார் பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்று கிழமை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பொதுமக்களிடையே ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக செயல்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, ஜெயக்குமாரி பாலேந்திரன் மற்றும் அவரது 13 வயது மகள் விபூசியா ஆகியவர்களைப் பற்றிய தகவல்களை திரட்ட சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டுள்னர்.

இதற்கு, இலங்கை அரசிற்கு எதிராக ஆதாரம் திரட்டி வெளியிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் இலங்கை ராணுவம் இவர்களை கைது செய்திருக்க வேண்டும் என ஈழ ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மனித உரிமை அமைப்புகளின் தொடர் அழுத்தம் காரணமாக அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதனை இலங்கை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இருப்பினும் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி இன்னும் தடுப்புக் காவலிலும் அவரது மகள் சிறப்பு பாதுகாப்பு முகாமிலும் வைக்கப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top