திருட்டு விசிடியை கட்டுப்படுத்துங்கள்: புதுச்சேரி முதல்வருக்கு ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா வேண்டுகோள்

kutramkadithal_2588479fதமிழகத்தை விட புதுச்சேரியில் திருட்டு விசிடி அதிகளவு விற்பனையாவதால் அதை கட்டுப்படுத்துமாறு, ‘குற்றம் கடிதல்’ திரைப்பட இயக்குநர் பிரம்மா கோரிக்கை விடுத்தார்.

புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா நேற்று தொடங்கியது. தென்னிந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழாவில், 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக ‘குற்றம் கடிதல்’ படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்து சங்கர தாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

முன்னதாக, ருக்மணி திரையரங்கில் மாலை 6 மணிக்கு விழா நடைபெறுவதாக அறிவிக்ப்பட்டு இருந்ததால் ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தை இலவசமாக காண கூட்டம் அதிக அளவில் கூடியது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் பிரம்மா மற்றும் திரைப்பட குழுவினர் வந்தனர். அவர்கள் விருது பெற வந்ததாக எடுத்துக் கூறிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில், விருதை வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசும்போது, “புதுச்சேரியில் நலத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வோம். திரைப்படங்களை தேர்வு செய்து தொடர்ந்து பரிசளிப்பதே இதற்கு உதாரணம். வரலாற்று படங்களை எடுக்க தயங்குகிறார்கள். நல்ல கருத்துகளை படமாக்க வேண்டும்” என்றார்.

அதன்பிறகு, இயக்குநர் பிரம்மா பேசும்போது, “தமிழகத்தை விட புதுச்சேரியில் திருட்டு விசிடி அதிகளவு விற்பனையாகிறது. அதை கட்டுப்படுத்த புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு ஊக்கமாக இருக்கும். இது வர்த்தக ரீதியாக பலன் தரும்” என்றார்.

விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் இயக்குநர் பிரம்மா கூறும்போது, “திரையரங்கு மட்டுமில்லாமல் ஆன்லைனிலும் வெளியானதால் வெளிநாடுகளில் இருந்து பலரும் பார்த்து கருத்துகளை தெரிவித்தனர். ஆசிரியர்களுக்கு மட்டுமான செய்தி இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.

சமூகத்தினர் பலருக்குமான தகவல்கள் இதில் இயல்பாய் இடம் பெற்றுள்ளன. அடுத்த திரைப்படத்துக்கான திரைக்கதை தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. கலை ரசனையுடன் ஜனரஞ்சகத்துடனான சமூக விழிப்புணர்வு படமாக இருக்கும். தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை இத்திரைப்படம் தந்துள்ளது” என்றார்.

இலவசமாக பார்க்கலாம்:

திரைப்பட விழா நேற்று தொடங்கியதை தொடர்ந்து இன்று (17ம் தேதி) போதான் (பெங்காலி), 18ம் தேதி முன்னறிவிப்பு (மலையாளம்), 19ம் தேதி “1 டிசம்பர்” (கன்னடம்), 20ம் தேதி ஆங்கோன் தேக்கி (ஹிந்தி) ஆகிய திரைப்படங்கள் ருக்மணி திரையரங்கில் திரையிடப்படும். அனைத்து திரைப்படங்களையும் இலவசமாக பார்க்கலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top