மேலூர் அருகே செம்மண் தோண்டிய இடத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

poமேலூர் அருகே உள்ள பூதமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்டது நாகப்பன்செவல்பட்டி கிராமம். இந்த கிராமத்துக்கு 25 ஆண்டுகளுக்கு பின் தார்ச்சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கள்ளங்காடு பகுதியில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 300 ஏக்கர் அரசு மேட்டு பகுதியில் பொக்லைன் இயந்திர உதவியுடன் பெரிய பள்ளங்கள் தோண்டி செம்மண் அள்ளப்பட்டு லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.

இவ்வாறு செம்மண் தோண்டிய இடத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண் பானைகள், மண் குடுவைகள், கற்களினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட மிக பழங் கால பொருட்கள் வெளியே வந்துள்ளன. பாதுகாக்க வேண்டிய இந்த வரலாற்று பொக்கிஷங்களை, பொக் லைன் இயந்திரத்தினால் உடைத்து நொறுக்கி போட்டுள்ளனர். ரோட்டின் பக்கவாட்டிலும் வீணாக கிடக்கின்றன.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கள்ளங்காடு இடத்தில் ஒரு பெரிய கோவில் இருந்துள்ளது. இந்த கோவிலைச் சுற்றி பெரிய கற்பலகைகளினால் ஆன வீடுகளில் மக்கள் வசித்துள்ளனர். பாதுகாப்புக்கு கற்குவியல்களினால் ஆன கோட்டை சுவர்கள் எழுப்பியுள்ளனர். இங்கு வசித்தவர்கள் வெளி இடங்களுக்கு சென்று திருடி வந்துள்ளனர். அவ்வாறு திருடி வந்த பொருட்களை சுற்றுப்பகுதியில் புதைத்து வைத்துள்ளனர். இதனால் அவர்கள் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக பேய், பிசாசுகள் இருப்பதாக பல்வேறு கட்டு கதைகளை இப்பகுதியில் பரப்பி உள்ளனர். அதே நிலைமைதான் இன்னும் இப்பகுதியில் மக்களிடையே நிலவுகிறது. இந்த பயத்தினால்தான் தற்போது 300 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யாமல் அப்படியே பாதுகாப்பாக உள்ளது. இந்த இடத்தில் கிணறு தோண்டி விவசாயம் செய்த ஒருவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு ஊரை விட்டே ஓடி விட்டார். அந்த கிணறு இன்னும் அங்கு உள்ளது.

கள்ளங்காடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக பொக் லைன் இயந்திரத்தினால் செம்மண் அள்ளப்படுகிறது. அப்போது ஏதோ புதையல் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தின் அருகே பெரிய கற்பலகை வீடு இருந்த இடமும் புதையல் எடுப்பதற்காக தோண்டபட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. மதுரை அருகே கீழடி எனுமிடத்தில் தொல்லியல் துறையினர் பழங்கால கிராமத்தை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். அதேபோலவே மேலூர் அருகே கள்ளங்காடு பகுதியிலும் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு புதைந்து கிடக்கும் வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top