பஞ்சாபில் சீக்கியர்கள் போராட்டம் போலிஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு 2 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தின் பரீத்கோட் மாவட்டத்தில் பதிண்டா-கோட்காபுரா சாலையில் உள்ள புனித தலத்தில் இருந்து சீக்கியர்களின் புனித நூல் சமீபத்தில் திருடு போனது. இதனையடுத்து, மோகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வந்தது. மேலும், திருடுபோன புத்தகத்தின் சில பக்கங்களை மர்ம நபர்கள் சிலர் மோகா பகுதியில் கிழித்துவிட்டு சென்றதாக வதந்தி பரவியது.

இந்நிலையில், புனித நூல் கிழித்தெறிப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்று சீக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பரித்கோட், மோகா, சங்ரூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீஸ் வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.

பரித்கோட் மாவட்டத்தின் பெஹ்பால் காலன் கிராமத்தின் அருகே போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அகற்ற முயன்றபோது பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை விரட்டியடித்தனர். இதில், 20 வயது நிரம்பிய இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.

இதுதவிர பல்வேறு இடங்களில் நடந்த மோதல்களில் பதிண்டா பிராந்திய ஐ.ஜி. மற்றும் போலீஸ்காரர்கள் உள்பட 75 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top