ஜனாதிபதியின் பாலஸ்தீனிய பயணத்தில் சர்ச்சை; தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க மறுப்பு

963பாலஸ்தீனிய கல்வி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனது பயணத்தின்போது கம்ப்யூட்டர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பரிசாக வழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை இஸ்ரேல் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதனால் ஜனாதிபதியின் பயணத்தில் சர்ச்சை ஏற்படக்கூடும் என்றும் கருதப்படுகிறது. ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயணம் சென்றுள்ளார். பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டான் சென்ற ஜனாதிபதிக்கு, அவரது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை போற்றும் வகையில் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர், தனது பணிகளை முடித்துக் கொண்ட பிரணாப், அங்கிருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்-அவிவ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கினார். அதன் பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு ஒரு நாள் பயணமாக நேற்று பாலஸ்தீனம் சென்றடைந்தார்.

இதன் மூலம், இந்தியத் தலைவர்களில் முதன்முறையாக பாலஸ்தீனம் சென்றவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடும் போர் மூண்டுள்ள நிலையில் டெல்-அவிவ் நகரில் இருந்து இஸ்ரேல் அரசு ஏற்பாடு செய்த காரில் புறப்பட்ட பிரணாப் முகர்ஜியை இரு நாட்டு எல்லைப் பகுதியில் வரவேற்ற பாலஸ்தீனிய கல்வி அமைச்சர் சப்ரி செய்டன், அதன் பின் அவரை பாலஸ்தீன அரசு ஏற்பாடு செய்திருந்த காரில் நாட்டுக்குள் அழைத்துச் சென்றார். பாலஸ்தீன நாட்டின் அல்-குத்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை பிரணாப் முகர்ஜி துவக்கி வைக்கிறார். பல்கலைக்கழகம் தரப்பில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்தியத் தரப்பில், அல்-குத்ஸ் பல்கலைக்கழகத்திற்கு தகவல் தொழில் நுட்ப சாதனங்களை அவர் பரிசாக வழங்க உள்ளார். இந்தியா அனுப்பி வைத்து இஸ்ரேலின் அஷ்தாத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த 30 கணினிகளை பாலஸ்தீனம் கொண்டு செல்ல இஸ்ரேல் சுங்கத் துறை அனுமதி அளித்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாலஸ்தீனம் சென்றடைவதற்கு முன்னதாக, கணினிகள் அந்நாட்டைச் சென்றடையும் என்று ஜெருசலத்தில் உள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பென் குரியான் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் 4 தகவல் தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு செல்ல இஸ்ரேல் நாட்டு சட்டம் இடம் அளிக்கவில்லை என்று இதற்கு காரணம் கூறப்பட்டது. இந்தியாவில் சாட்டிலைட் போன் பயன்படுத்த தடை உள்ளது. அது போல், இந்தியா அனுப்பி வைத்துள்ள தகவல் தொழில் நுட்ப தொடர்பு சாதனங்களை பயன்படுத்த தொழில்நுட்ப ரீதியிலும், மற்றும் தற்போதுள்ள அலைவரிசைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும், ஆனால் அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, உச்சகட்ட பாதுகாப்பு வட்டத்தில் உள்ள அல்-அக்சா மசூதிக்கு பிரணாப் முகர்ஜி செல்வதற்க்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.

உலகின் மூன்றாவது புனித இடமாக அல்-அக்சா மசூதியை முஸ்லிம்கள் கருதுகின்றனர். ஆனால், மசூதியின் அருகிலேயே யூதர்களின் புனித தலமும் இருப்பதாலும், கடந்த செப்டம்பர் முதல் அங்கு சண்டை நடந்து வருவதாலும், அப்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மசூதிக்குச் செல்ல அனுமதி மறுத்தும், தகவல் தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களுக்கு சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ள இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் பயணத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து மூன்று நாள் பயணமாக பிரணாப் இன்று இஸ்ரேல் புறப்படுகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top