நீதிபதிகள் குறித்து விமர்சனம்: வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில், பிரபல கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகரில் கடந்த மாதம் 12-ம் தேதி, மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சினிமா ஃபைனான்சியர் முகுன் சந்த் போத்ரா மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “நீதித்துறை, நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்து மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இதற்கு அட்வகேட் ஜெனரலிடம் முன் அனுமதி பெற வேண்டுமா என்பது குறித்து  முடிவு எடுப்பது குறித்து இன்று விசாரணை நடைபெற்றது.

 

இதுபற்றி விசாரணை செய்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், “இந்த மனுவுடன் இணைத்துள்ள சி.டி.யை போட்டு பார்த்தோம். இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான். எனவே, இந்த வழக்கு மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுகிறோம்” என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

பிரபல கவிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top