முதல் ஒருநாள் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

8d12b7b9-094b-49f0-b91d-6776071f67ef_S_secvpfதென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற இருந்த 3–வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

அடுத்து இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா– தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் ஆட்டம் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் நாளை (11–ந்தேதி) நடக்கிறது.

20 ஓவர் போட்டித் தொடரை இழந்ததால் இந்திய அணி கேப்டன் டோனி மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார். ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தென்ஆப்பிரிக்காவிடம் 20 ஓவர் தொடரை இழந்ததற்கு இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும்.

20 ஓவர் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத ரகானே ஒருநாள் தொடரில் இடம் பெறுவார். ஒருநாள் அணியில் பஞ்சாப்பை சேர்ந்த குர்கீரத் சிங் இடம் பெற்றுள்ளார். சர்வதேச போட்டியில் முதல் முறையாக களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றியுடன் இந்திய அணி கணக்கை தொடங்க இயலும்.

டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். அந்த அணியில் கேப்டன் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, டுமினி, டுபெலிசிஸ், மில்லர், ஸ்டெய்ன், மார்னே மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உலககோப்பை போட்டியில் மோதின. மெல்போனில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 130 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்திய அணி கடைசியாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தென்ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணி வீரர்கள் விவரம்:–

இந்தியா: டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகார் தவான், வீராட் கோலி, ரெய்னா, ரகானே, அம்பதிராயுடு, அஸ்வின், அக்ஷர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர்குமார், மொகித்சர்மா, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, குர்கீரத்சிங்.

தென்ஆப்பிரிக்கா: டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் டிகாக், டுபெலிசிஸ், டுமினி, மில்லர், பெகருதீன், கிறிஸ் மாரிஸ், மார்னே மார்கல், அபோட், ஆரோன் பான்ஜியோ, இம்ரான்தாகீர், ஸ்டெயின், ரபடா, ஜோன்டோ.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top