தமிழக மக்கள் நலனை காக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பழ.நெடுமாறன்

ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை, எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை, தமிழர் உரிமை நிலை நாட்டல், நிர்வாகத்தில் நேர்மை, இயற்கை வளம் காத்தல், மது ஒழிப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை தமிழர் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று மயிலாடுதுறையை வந்தடைந்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழர் எழுச்சிப் பயணத்தின் நோக்கம் வாக்கு வேட்டைக்கான பயணம் இல்லை. தமிழர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் காக்கும் பயணம். இயற்கை வளங்கள் சீரழிவு, மது விற்பனை, நாகரிகமற்ற சந்தர்ப்பவாத அரசியல், தரமற்ற கல்வி, அந்நிய மூலதானம், வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் தயாரிப்பு போன்றவைகள் மீது தமிழர்களுக்கு உள்ள மோகம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு சலுகைகளுடன் கூடிய வாய்ப்பு ஆகியவற்றால் தமிழகம் சீரழிந்து வருகின்றது. இந்த சீரழிவை தடுத்து நிறுத்தவேண்டும். தமிழக மக்கள் நலனை காப்பதற்கு தேவ தூதர்கள் வருவார்கள் என்று காத்திராமல், சீரழிவைத் தடுக்க இளைஞர்கள் ஆங்காங்கு ஒன்றிணைந்து போராடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி, நாகை மாவட்டச் செயலாளர் இரா.முரளிதரன் தலைமை தாங்கினார். தமிழர் எழுச்சிப் பயணக்குழுவினருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சியில், எழுச்சிப் பயணக்குழுவில் இடம் பெற்றிருந்த அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் சி.முருகேசன், திரைப்பட இயக்குனர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழ் தேசிய முன்னணியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முன்னதாக, தமிழ் தேசிய முன்னணியின் நகரத் தலைவர் கவிஞர் வே.பூபதி வரவேற்றார். நிறைவில் பொருளர் இரா.புஷ்பராசு நன்றி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top